ஷேக் ஹசீனா! Christophe Ena
உலகம்

இந்தியா வந்தார் ஷேக் ஹசீனா!

ஹெலிகாப்டரில் வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரப்பிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படைத்தளத்தில் வந்திறங்கியதாகத் தகவல்.

DIN

வங்கதேச பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தகவல்படி, டாக்காவிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஷேக் ஹசீனா இந்தியா வந்திருப்பதாகவும், இந்தியாவிலிருந்து அவர் லண்டன் சென்று அங்கு தஞ்சமடையவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா லண்டன் செல்வதற்கான வழிகளை இந்தியா செய்து கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சி-130 விமானம் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரியுடன் இந்தியாவுக்குள் நுழைய இந்தியப் பாதுகாப்பு அமைப்பிடம் அனுமதி கேட்டிருந்தது.

வங்கதேச விமானப் படை ஹெலிகாப்டர் பாட்னா வாழியாக உத்தரப்பிரதேசம் - பிகார் எல்லைப் பகுதிக்கு வந்தடைந்தது. பின்னர் ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா இந்தியாவிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாகவே லண்டன் செல்வாரா அல்லது விமானம் மூலம் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுமா என்று தகவல்கள் வெளியாகவில்லை. முதற்கட்டமாக, இந்திய விமானப் படை அதிகாரி ஒருவர் ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் ஷேக் ஹசீனாவை வரவேற்றதாகக் கூறப்படுகிறது.

டாக்காவிலிருந்து வந்த கோரிக்கையை ஏற்று, ஷேக் ஹசீனா ஐரோப்பா செல்வதற்கான வழிகளை இந்தியா ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஷேக் ஹசீனாவின் வருகை குறித்து மத்திய அரசு தரப்பில் எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. வங்கதேசத்தில் அடுத்தடுத்து நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாகவும், அவர் இந்தியாவிலிருந்து லண்டன் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு நாள்கள் தங்கியிருப்பாரா அல்லது நேரடியாக லண்டன் செல்கிறாரா என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

முன்னதாக, வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்ததோடு, புதிய இடைக்கால அரசு ராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்படும் என்றும் ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு பெறும் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கதேசம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பாதுகாப்பு கருதி, ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டுச் சென்றார்.

வங்கதேச ராணுவ தளபதி வாகர் - உஸ்-ஹமான் இதனை உறுதி செய்திருந்தாலும், ஷேக் ஹசீனா எங்குச் சென்றார் என்பது முதலில் உறுதி செய்யப்படவில்லை. தற்போது அவர் இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, ஆளும் அவாமி லீக் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்களிடம் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து இவர்கள் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் வன்முறைப்போராட்டம் தலைதூக்கிய வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 98 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இணைய சேவை துண்டிப்பு மற்றும் நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வங்கதேச அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ அறிவித்தது. இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.

இன்று காலை போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பாதுகாப்புக் கருதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, அந்நாட்டு அரசை ராணுவம் கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT