இது மிகப்பெரிய அசம்பாவிதம், வினேஷ் விருது மேடையில் நிற்பதற்குத் தகுதியானவர், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கொடுங்கள் என்று உலக சாம்பியன் ஜோர்தான் பர்ரௌஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிக்கு முன்னேறியிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை அதிகம் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இன்னமும் இந்த அதிர்ச்சியிலிருந்தே இந்திய மக்கள் வெளியே வராத நிலையில், அவர் இதற்கு மேலும் போராட மன வலிமை இல்லை என்று கூறி தனது ஓய்வு அறிவிப்பையும் வினேஷ் போகத் வெளியிட்டு மேலும் அதிர்ச்சியளித்திருக்கிறார்.
அமெரிக்க ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான ஜோர்டான் பர்ரௌஸ், தொடர்ந்து தனது ஆற்றாமையை நேற்று எக்ஸ் பதிவில் கருத்துகளாக பதிவிட்டுள்ளார். இன்று அது வைரலாகியிருக்கிறது.
இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரர்கள் இதுவரை இந்திய மல்யுத்த வீராங்கனைக்காக குரல் கொடுக்காத நிலையில், ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான ஜோர்தான் பர்ரௌஸ், வினேஷ் போகத்துக்காக குரல் கொடுத்துள்ளார்.
உலக அரங்கில், இவரது குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. இந்திய வீராங்கனைக்காக குரல் கொடுத்திருக்கும் ஜோர்தான், மற்ற வீரர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக மாறியிருக்கிறார்.
அவர் இது குறித்து வெளியிட்டிருக்கும் பதிவில், கடவுளே, வினேஷின் உடல் எடை குறைவது தொடர்பான மாற்றங்களை நம்மில் எவராலும் புரிந்துகொள்ள முடியாது என்றே நான் நினைக்கிறேன். இன்று காலை விடிந்தபோது வினேஷ், இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் இறுதிப் போட்டியாளர், குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தவர் என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது அவர் பதக்கம் இல்லாமல் வீடு திரும்புவார். கடவுள் அவரை ஆசீர்வதிப்பார், அவர் முன்னேற வேண்டிய அனைத்தையும் அவர் நிச்சயம் அடைவார், அவள் இந்த வாரம் மிகச் சிறப்பாக செயல்பட்டார், இன்று அந்த பதக்க மேடையில் இருக்கத் தகுதியானவர். இது மிக மோசமானது என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து, வினேஷ் பற்றி இந்தியா பேசிக்கொண்டிருக்கும் போது, ஜோர்டானும் தொடர்ந்து இதுபற்றி நேற்று முழுவதும் தனது ஆற்றாமையை எக்ஸ் பதிவுகளாக பதிவிட்டுக்கொண்டேதான் இருந்தார்.
கடைசியாக, அவர் வினேஷுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.