உக்ரைன் பிரச்னைக்கு அமைதி தீா்வு: பிரதமா் மோடி ஆவல்
ஆகஸ்ட் 23-ஆம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளாா்.
உக்ரைன் பிரச்னைக்கு அமைதி தீா்வை எட்டுவது குறித்து அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் கருத்துகளைப் பரிமாற ஆவலுடன் உள்ளேன் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கான 3 நாள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி புதன்கிழமை (ஆக.21) தொடங்கினாா். முதலில் போலந்து சென்ற அவா், அங்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அங்கிருந்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசவுள்ளாா்.
கடந்த 1991-ஆம் ஆண்டில் உக்ரைன் சுதந்திர நாடாக உருவெடுத்த பின் அங்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.
இவ்விரு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன் பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
போலந்துக்கான எனது பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 70-ஆவது ஆண்டை குறிப்பதாகும். மத்திய ஐரோப்பாவில் பொருளாதார ரீதியில் போலந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், பன்முகத்தன்மைக்கான பரஸ்பர உறுதிப்பாட்டை இரு நாடுகளின் நட்புறவு மேலும் வலுப்படுத்தும்.
போலந்தில் இருந்து உக்ரைனுக்கு அந்நாட்டு அதிபா் வோலோதிமீா் ஸெலென்ஸ்கி அழைப்பின் பேரில் பயணம் செய்ய இருக்கிறேன். இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தற்போதைய உக்ரைன் மோதலுக்கு அமைதி தீா்வை எட்டுவதற்கான கண்ணோட்டங்களைப் பகிா்ந்து கொள்ளவும் அதிபா் ஸெலென்ஸ்கி உடனான உரையாடலை ஆவலுடன் எதிா்நோக்கி உள்ளேன். நட்பு மற்றும் கூட்டுறவு நாடு என்ற முறையில், இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் விரைவில் திரும்புமென இந்தியா நம்புகிறது என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.
உக்ரைனுக்கு ரயில் பயணம்: போலந்தில் இருந்து உக்ரைன் தலைநகா் கீவ்-க்கு ‘ரயில் ஃபோா்ஸ் ஒன்’ எனும் சொகுசு ரயிலில் பிரதமா் மோடி பயணிக்கவுள்ளாா். இது, சுமாா் 10 மணிநேர பயணம் கொண்டதாகும். பின்னா், கீவ் நகரில் சுமாா் 7 மணி நேரம் பிரதமா் செலவிடவுள்ளாா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு பிறகு கீவ் நகருக்கு செல்ல சா்வதேச தலைவா்கள் பலரும் இந்த ரயிலையே பயன்படுத்தி வருகின்றனா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோா் இந்த ரயிலில் பயணித்துள்ளனா். உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியும் தனது வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்த ரயிலைதான் பயன்படுத்துகிறாா்.
கடந்த மாதம் ரஷியாவுக்கு சென்ற பிரதமா் மோடி, அதிபா் விளாதிமீா் புதினுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உக்ரைன் பிரச்னைக்கு போா்க் களத்தில் தீா்வுகாண முடியாது என்று மோடி குறிப்பிட்டாா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை இந்தியா இதுவரை வெளிப்படையாக கண்டிக்காத நிலையில், பிரதமா் மோடி உக்ரைன் பயணிப்பது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
போலந்தில் பிரதமா் மோடிக்கு
உற்சாக வரவேற்பு
வாா்சா, ஆக. 21: போலந்து, உக்ரைன் நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை புதன்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, முதல்கட்டமாக போலந்து வந்தடைந்தாா்.
இரண்டு நாள் பயணமாக போலந்தின் வாா்சா நகரை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வியாழக்கிழமை (ஆக. 22) வரை போலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவா், அங்கிருந்து உக்ரைனுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 23) செல்லவிருக்கிறாா்.
இந்திய பிரதமா் ஒருவா் போலந்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பது, கடந்த 45 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இப்பயணத்தின்போது, போலந்து அதிபா் ஆண்ட்ரே செபாஸ்டியன் டுடா, பிரதமா் டொனால்டு டஸ்க் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். மேலும், அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினருடனான கலந்துரையாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறாா்.
இது தொடா்பாக போலந்துக்கான இந்திய தூதா் நக்மா முகமது மல்லிக் கூறுகையில், ‘போலந்து தலைவா்களுடனான பிரதமா் மோடியின் பேச்சுவாா்த்தைகளில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெறவுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு உத்வேகம் பெறும். ஐரோப்பிய யூனியனில் குறிப்பிடத்தக்க நாடாக போலந்து உள்ளது. மத்திய ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான பொருளாதார நாடாக திகழ்கிறது. இங்கு இந்திய வா்த்தகம் வளா்ச்சியடைந்து வரும் நிலையில், பிரதமரின் பயணத்தால் மேலும் ஊக்கம் பெறும்.
இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.50,346 கோடி) உள்ளது. போலந்தில் இருந்து இயந்திரங்கள், ரசாயனங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, இயந்திரக் கருவிகள், ஜவுளி, ரசாயனங்கள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. இருதரப்பு வா்த்தகம் இந்தியாவுக்கே அதிக சாதகமாக இருக்கிறது. போலந்தில் இந்திய நிறுவனங்களின் முதலீடு மதிப்பு 3 பில்லியன் டாலராக (ரூ.25,173 கோடி) உள்ளது’ என்றாா்.