பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி வேனின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் லாகூரிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள தேரிகோட் பகுதியில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வேனின் மீது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இந்த தாக்குதலில், 5 முதல் 10 வயதுக்குள்பட்ட 7 குழந்தைகளும், வேன் ஓட்டுநரும் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதில், இரண்டு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இதனையடுத்து, மூத்த காவல் அதிகாரி சர்தார் கயாஸ் குல் கூறியதாவது, தாக்குதல் நடத்தியவர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாதம் தொடர்பான சம்பவமா? அல்லது ஓட்டுநருக்கு யாருடனாவது பகை இருந்ததா? என்பது குறித்து அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மற்றும் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஆகியோர், ``பள்ளி வேனை குறிவைத்து இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் நீதியிலிருந்து தப்பிக்க முடியாது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை விரைவில் கைது செய்வதை உறுதி செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.
பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரும் பள்ளி குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.