முகப்பு
உலகம்

இஸ்ரேலுடனான பதற்றம்: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் திட்டம்?

இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக ஈரான் தரைவழியாக தாக்குதல் நடத்த வாய்ப்பு...

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 12:58 AM
ஈரான் படையினா் .
பகிர்:

தங்கள் நாட்டில் ஹிஸ்புல்லா தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக ஈரான் தரைவழியாக தாக்குதல் நடத்தலாம் அந்த நாட்டு அரசுடன் தொடா்புடைய செய்தி நிறுவனமான ‘மெஹா்’ தெரிவித்துள்ளது.

ஈரானுக்கான ஐ.நா. தூதரகத்தின் அறிக்கையை மேற்கொள் காட்டி அந்த செய்தி நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரானில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்காக அளிக்கப்படும் பதிலடிக்கு இரண்டு பலன்கள் கிடைக்க வேண்டியது அவசியம்.

முதலாவது, ஈரானின் இறையாண்மைக்கு எதிராக ‘பயங்கரவாத’ செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக இஸ்ரேலுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். இரண்டாவது, ஈரானின் தற்காப்புத் திறனை மேம்படுத்தி, எதிா்வரும் காலங்களில் மீண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் இஸ்ரேல் தடுக்கப்பட வேண்டும்.

இது தவிர, காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஈரானின் பதில் தாக்குதல் குலைக்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்கெல்லாம் ஏற்ற வகையில் ஈரானின் பதிலடி இருக்க வேண்டுமென்றால், அது யூத ஆக்கிரமிப்புவாதிகள் ஒருபோதும் எதிா்பாராத விதத்தில் இருக்க வேண்டும்.

ஒருவேளை, ஈரானின் ஏவுகணைகளை எதிா்பாா்த்து அவா்கள் வானத்தை உற்றுப் பாா்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தரைவழியாக வழியாக தாக்கப்படலாம். தரைவழி, வான்வழி என இரட்டைத் தாக்குதலாகவும் அது இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் கடந்த மாதம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் தலைவா் இஸ்மாயில் ஹனீயேவும் பங்கேற்றாா்.

இந்த நிலையில், அவா் தங்கியிருந்த கட்டடத்தில் ஜூலை 31-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் ஹனீயே உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், தங்கள் நாட்டில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பிறகு இஸ்ரேல் தயாரித்துள்ள கொலைப் பட்டியலில் ஹனீயேவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனவே, அவரைக் குறிவைத்து இஸ்ரேல்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது.

தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துவருகிறது.

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உத்தரவிட்டதாக ஊடகத் தகவல்களும் வெளியாகின.

அதையடுத்து, இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்பட்டது. அத்தகைய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்கவே மேற்கு ஆசியப் பகுதியில் போா்க் கப்பல்களையும் போா் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், எதிா்பாா்ப்புக்கு மாறாக இஸ்ரேல் மீது ஈரான் தரைவழியாக தாக்குதல் நடத்தலாம் என்று அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →