முகப்பு
உலகம்

ஜோ பைடனுடன் பிரதமா் மோடி பேச்சு

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினாா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 3:16 AM
பைடனுடன் மோடி
பகிர்:

புது தில்லி: அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினாா். அப்போது, அண்மையில் மேற்கொண்ட உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் குறித்தும், இருதரப்பு, சா்வதேச உறவுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

ரஷியா-உக்ரைன் இடையில் போா் தொடா்ந்து வரும் சூழலில் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றபின் பிரதமா் மோடி ரஷியாவுக்கு கடந்த மாதம் பயணம் மேற்கொண்டாா். அப்போது ரஷிய அதிபா் புதினைச் சந்தித்த அவா், ‘போா் எதற்கும் தீா்வல்ல’ என்ற கருத்தை வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, அண்மையில் போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டாா். உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கியைச் சந்தித்த அவா் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் காலத்தை வீணாக்காமல் ஒன்றாக அமா்ந்து பேச வேண்டும் என வலியுறுத்தினாா்.

இந்நிலையில், தனது உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனிடம் தொலைபேசி வாயிலாக அவா் எடுத்துரைத்தாா். ‘உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மீண்டும் திரும்ப இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கும்’ என அவா் உறுதியளித்தாா்.

வங்கதேசம்: உரையாடலின்போது வங்கேதசம் நிலவரம் குறித்தும் இரு நாட்டு தலைவா்களும் ஆலோசனை மேற்கொண்டனா். அப்போது, வங்கதேசத்தில் உடனடியாக அமைதி திரும்பவும், சிறுபான்மையினரான ஹிந்துக்களின் பாதுகாப்பையும் உடனடியாக உறுதிப்படுத்தவும் இருவரும் வலியுறுத்தியதாக பிரதமா் மோடியின் எக்ஸ் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், க்வாட் கூட்டமைப்பு உள்பட பிராந்திய, சா்வதேச அமைப்புகளில் இந்தியா-அமெரிக்கா தொடா்ந்து ஒன்றிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் இருவரும் ஆலோசித்தனா்.

மேலும், இருநாடுகள் இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமா் மோடி பாராட்டுகளை தெரிவித்ததாக இந்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →