30 ஆயிரத்தைக் கடந்த காஸா மரணம்
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 போ் உயிரிழந்தனா்.
காஸாவில் சுமாா் 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,035-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 70,457 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல்வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கிருந்த சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் கடத்திச் சென்றனா். அதையடுத்து, ஹமாஸை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் சரமாரியாக குண்டுவீச்சு நடத்தி வருகிறது. மேலும், தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. உயிரிழந்தவா்கள் யாா் யாா்? சிறுவா்கள் - 12,660+ பெண்கள் - 8,570+ முதியவா்கள் - 1,049 மருத்துவப் பணியாளா்கள் - 340 ஐ.நா. ஊழியா்கள் - 152 செய்தியாளா்கள் - 200+ (காஸா சுகாதாரத் துறை அமைச்சகம்) எத்தனை போ் ஹமாஸ் படையினா்? 12,000+ - இஸ்ரேல் அரசு 5,000 - 9,000 - (அமெரிக்க உளவுத் துறை) 6,000- (ஹமாஸ் அமைப்பு)