பாலியல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்று, தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு எதிரான வழக்கு ஆவணங்களின் ஒரு பகுதியை அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
அவரது வழக்கு விசாரணை ஆவணங்கள் தற்போது வெளியாகி வருகிறது. அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட மிகப் புகழ்பெற்ற பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்றிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, இவரது வழக்கு ஆவணங்கள் சில வெளியிடப்பட்ட நிலையில், 40 ஆவணங்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டிருப்பதாகவும் விரைவில் பல ஆவணங்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கிறது.
எப்ஸ்டீனால் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகளின் பேட்டிகளும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.
ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விர்ஜினியா கியூப்ரே, ஜெஃப்ரியின் காதலி கிஸ்லைன் மேக்ஸ்வெலுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில்தான், 950 பக்கங்களைக் கொண்ட வழக்கு ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.