முகப்பு
உலகம்

மத போதகரின் பிரசங்கத்தால் 7 பேர் தற்கொலை: காவல்துறை அறிவுறுத்தல்

தற்கொலை போன்ற தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது இலங்கை காவல்துறை.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
கோப்புப்படம்
பகிர்:

இலங்கையில், ஒரு மத போதகரின் பிரசங்கத்தைச் சேர்த்து, அடுத்த பிறவிக்கு விரைவாகச் செல்வதற்காக 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மத போதனைகளை செய்து வரும் ருவான் பிரசன்னா குணரத்னேவின் பிரசங்கத்துக்குச் சென்றவர்களை, தொடர்ந்து கண்காணித்து வருமாறும், அவர்கள் தற்கொலை போன்ற தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது இலங்கை காவல்துறை.

மதபோதகரின் பிரசங்கத்தில் பங்கேற்றவர்களில் 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

47 வயதாகும் ருவான் பிரசன்னா குணரத்னே, தனது பிரசங்கத்தின்போது, அடுத்த பிறவிக்கு எளிதாக, விரைவாகச் செல்ல தற்கொலை செய்து கொள்ளுவதே சிறந்த வழிமுறை என்று கூறியிருக்கிறார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பிரசங்கத்தில் ஈடுபட்டு வந்த குணரத்னே, டிசம்பர் 28ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் நடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று, அவர் தறகொலை செய்துகொண்டது போலவே அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதுமட்டுமல்லாமல், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 34 வயது நபர் ஒருவரும் அம்பலங்கோடாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல தொடர்ந்து எந்தத் தொடர்பும் இல்லாத 7 பேர் தற்கொலை செய்து கொண்டது இலங்கையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் மத போதகரின் பிரசங்கத்தில் பங்கேற்றவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது.

இதுபோன்ற தவறான பிரசங்கத்தில் பங்கேற்று உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →