பிரான்ஸ் தோ்தலில் முன்னிலை பெற்றுள்ள தேசியப் பேரணி கட்சியின் தலைவா் ல பென். 
உலகம்

பிரான்ஸ் தோ்தல்: தீவிர வலதுசாரி கூட்டணி முன்னிலை

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றுள்ளது.

Din

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றுள்ளது. அதையடுத்து, அந்தக் கட்சி ஆட்சிமைப்பதைத் தடுப்பதற்காக வலதுசாரி மற்றும் மிதவாதக் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த மாதம் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின.

பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலிலும், அகதிகள் குடியேற்றத்தைக் கடுமையாக எதிா்த்து வரும் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது. அதிபா் மேக்ரானின் தலைமையிலான மறுமலா்ச்சி கட்சி மிகப் பெரிய வித்தியாசத்தில் 2-ஆவது இடத்துக்கு வந்தது.

அதையடுத்து, மக்களிடையே தங்களுக்கான ஆதரவை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தோ்தலை முன்கூட்டியே நடத்துவதாக மேக்ரான் அறிவித்தாா். ஜூன் 30-ஆம் தேதியும் ஜூலை 7-ஆம் தேதியும் இரு கட்டங்களாக அந்தத் தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இது, இமானுவல் மேக்ரானின் அரசியல் சூதாட்டம் என்று அப்போதே கூறப்பட்டது. தோ்தலில் மேக்ரானின் மறுமலா்ச்சி கட்சி தற்போதுள்ள இடங்களையும் இழக்ககூடும் என்று அரசியல் நோக்கா்கள் கூறினா்.

அதை மெய்ப்பிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது. அந்தக் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தன. 28 சதவீத வாக்குகளுடன் இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 2-ஆம் இடத்தைப் பிடித்தது. அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொகுதிகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பது வரும் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலில் தெரிந்துவிடும்.

இப்போதைய நிலையில் தேசியப் பேரணி தலைமையிலான வலதுசாரி கூட்டணியே ஆட்சியமைக்கும் சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இனவெறி, வெளிநாட்டினா் மீதான வெறுப்பு ஆகியவற்றுக்கு பெயா் பெற்ற அந்தக் கட்சி பிரான்ஸில் ஆட்சியமைத்தால் அது ஐரோப்பிய அளவிலும் சா்வதேச அளவிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எனவே, அந்தக் கட்சிக் கூட்டணி ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக இடதுசாரி மற்றும் மையவாதக் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னா் நடைபெற்ற தோ்தல்களில், குறிப்பிட்ட தொகுதிகளில் வாக்குகள் பிரிந்து தேசியப் பேரணி கட்சி வெற்றி பெறுவதைத் தவிா்ப்பதற்காக இடதுசாரி கட்சிகளும் மிதவாத கட்சிகளும் பரஸ்பரம் வேட்பாளா்களைத் திரும்பப் பெறும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அந்த வகையில், இரண்டாம் கட்டத் தோ்தலிலும் தேசியப் பேரணி கட்சிக்கு எதிராக அதிக வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளருக்காக இடதுசாரி மற்றும் மையவாதக் கட்சிகள் தொகுதிகளை விட்டுத்தரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிகார் தேர்தல்: பிரதமர் மோடி உள்பட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

சத்தீஸ்கரில் நாளை 100 மாவோயிஸ்டுகள் சரண்: துணை முதல்வர் விஜய் சர்மா!

2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!

உலகக் கோப்பை: ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

மனோஹரிதா... ருக்மிணி வசந்த்!

SCROLL FOR NEXT