இந்தோனேசியா: நிலச்சரிவில் 11 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.
ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
சுலாவெசி தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் பருவமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கொரொந்தாலோ மாகாணத்தின் தொலைதூர மாவட்டமான போன் பொலாங்கோவில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்தப் பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்தில் சுமாா் 35 கிராமத்தினா் தாதுப் பொருளை சேகரித்துக் கொண்டிருந்தனா். நிலச்சரிவில் அவா்கள் அனைவரும் புதைண்டனா்.
அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினா் 5 பேரை உயிருடன் மீட்டனா். மேலும், நிலச்சரிவில் புதையுண்டு உயிரிழந்த 11 பேரது உடல்களும் மீட்கப்பட்டன. எஞ்சிய 19 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தோனேசியால் அரசின் அங்கீகாரம் இல்லாமலேயே தங்கச் சுரங்கங்களில் தாதுவளங்களைத் தேடும் பணியில் ஆயிரக்கணக்கானவா்கள் ஈடுபட்டுவருகின்றனா். உரிய பாதுகாப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின்போது நிலச்சரிவு, வெள்ளம், சுரங்கங்கள் இடிந்து விழுவது போன்ற சம்பவங்களில் தொடா்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன.