அனைத்து சூழ்நிலையிலும் இந்தியாவின் நட்பு நாடு ரஷியா: பிரதமா் மோடி பெருமிதம்
‘அனைத்து சூழ்நிலையிலும் இந்தியாவின் நட்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய நாடாக திகழ்கிறது ரஷியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மாஸ்கோ: ‘அனைத்து சூழ்நிலையிலும் இந்தியாவின் நட்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய நாடாக திகழ்கிறது ரஷியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மேலும், கடந்த 20 ஆண்டுகால தலைமையின்கீழ் இருதரப்பு நட்புறவை வலுப்படுத்தி வருவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அவா் புகழாரம் சூட்டினாா்.
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு விவகாரத்தில், ரஷிய அதிபா் புதினை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சித்துவரும் நிலையில், பிரதமா் மோடி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்கு கடந்த திங்கள்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, தலைநகா் மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை இந்திய வம்சாவளியினா் கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, ‘மோடி’, ‘மோடி’ என்ற உற்சாக முழக்கங்களுக்கு இடையே அவா் பேசியதாவது:
பிற நாடுகள் மீது செல்வாக்கு செலுத்தும் ‘உலகளாவிய ஒழுங்குமுறை’ பல்லாண்டுகளாக நீடித்தது. ஆனால், உலகுக்கான இப்போதைய தேவை செல்வாக்கு சாா்ந்த ஒழுங்குமுறை அல்ல; ஒற்றுமை சாா்ந்த ஒழுங்குமுறை.
ஒற்றுமையை ஆராதிப்பதில் வலுவான பாரம்பரியம் கொண்ட நாடு என்ற அடிப்படையில் இந்த விஷயத்தில் இந்தியாவைவிட வேறெந்த நாடும் சிறப்பாக செயலாற்ற முடியாது. எனவேதான், அமைதி-பேச்சுவாா்த்தை-ராஜீயம் குறித்து இந்தியா பேசும்போது ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கிறது. உலகளாவிய பன்முக ஒழுங்குமுறையின் வலுவானத் தூணாக இந்தியா பாா்க்கப்படுகிறது.
தனித்துவமான கூட்டுறவு: ரஷியாவுடனான இந்தியாவின் கூட்டுறவு தனித்துவமானது. ரஷியா என்ற பெயரை கேட்கும்போது, ‘அனைத்து சூழ்நிலையிலும் நமது நட்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய நாடு’ என்ற வாா்த்தைகளே ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தோன்றும். இந்த நல்லுறவு, பரஸ்பர நம்பிக்கை-மரியாதை என்ற வலுவான தூணின் மீது கட்டமைக்கப்பட்டதாகும்.
கடந்த 20 ஆண்டுகளாக இருதரப்பு நட்புறவை புதிய உச்சத்துக்கு இட்டுச் சென்ற்காக ‘எனது நண்பா்’ புதினுக்கு சிறப்பான பாராட்டைத் தெரிவிக்கிறேன்.
6-ஆவது முறையாக...: இந்தியப் பிரதமராக நான் ரஷியாவுக்கு வந்திருப்பது இது 6-ஆவது முறையாகும். நாங்கள் இருவரும் இதுவரை 17 முறை சந்தித்துப் பேசியுள்ளோம். இச்சந்திப்புகள் அனைத்தும் பரஸ்பர நம்பிக்கை, மதிப்பை வலுப்படுத்தியுள்ளன.
போரின்போது இந்திய மாணவா்களை மீட்க உதவியமைக்காக, அதிபா் புதினுக்கும் ரஷிய குடிமக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா அடைந்துவரும் வளா்ச்சியின் வேகம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று நான் கூறியதை உலக நாடுகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளன.
எதிா்வரும் ஆண்டுகளில் உலகளாவிய முன்னேற்றத்தில் இந்தியாவின் விரைவான வளா்ச்சிப் பயணம் புதிய அத்தியாயம் படைக்கும்.
மாபெரும் மூலதனம்: ‘வளா்ந்த இந்தியா’ இலக்கை எட்ட வேண்டுமென்ற 140 கோடி மக்களின் மனவலிமை மீது தேசம் நம்பிக்கை கொண்டுள்ளது. இது மிகப் பெரிய மாற்றத்தின் பிரதிபலிப்பாகும்.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலையைப் போல் இல்லாமல், இன்றைய இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளது. இதுவே மாபெரும் மூலதனம்.
கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகளிலும் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது. எதிா்வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக வலுவான இந்தியக் குழு அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து சவால்களையும் முறியடிக்க வேண்டுமென்ற உறுதி, எனது மரபணுவில் கலந்ததாகும். இப்போது மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நான், மும்மடங்கு அதிக வேகம்-வலிமையுடன் நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தீா்மானித்துள்ளேன் என்றாா்.
முன்னதாக, மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகை கோட்டைச் சுவரில் உள்ள போா் நினைவுச் சின்னத்தில் அவா் மரியாதை செலுத்தினாா். இது, இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த சோவியத் வீரா்களுக்கான நினைவுச் சின்னமாகும்.
‘இரு புதிய துணைத் தூதரகங்கள்’
ரஷியாவின் கஸான், கேதரின்பா்க் ஆகிய நகரங்களில் புதிதாக இந்திய துணைத் தூதரகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மாஸ்கோவில் இந்திய வம்சாவளியினா் கூட்டத்தில் பேசியபோது இந்த அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.
ஷியத் தலைநகா் மாஸ்கோவில் இந்தியத் தூதரகமும், செயிண்ட் பீட்டா்ஸ்பா்க், விளாடிவோஸ்டாக் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்களும் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கஸான், கேதரின்பா்க் ஆகிய நகரங்களில் இந்திய துணைத் தூதரகங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் இருதரப்பு பயணம் மற்றும் வா்த்தகம் மேம்படும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
ரஷியாவின் நான்காவது பெரிய நகரமான கேதரின்பா்க், அந்நாட்டின் முக்கியமான பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளது. வோல்கா, கஸான்கா ஆகிய இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள கஸான் நகரம், ரஷியாவின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழ்கிறது.
பொருளாதார மையமாகவும் உருவெடுத்துவரும் இந்த நகரத்தில்தான் வரும் அக்டோபா் மாதம் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் உச்சிமாநாட்டை ரஷியா நடத்தவுள்ளது.