பிரிட்டனில் நாடாளுமன்ற கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பகவத் கீதை, பைபிள் ஆகியவற்றை சாட்சியாகக் கொண்டு பதவியேற்றனர்.
பிரிட்டனில் "ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்' எனப்படும் நாடாளுமன்ற கீழவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட்ட முதல் வாரத்துக்குள் உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இதையடுத்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். அவர்களில் பலர் பகவத் கீதையையும் பைபிளையும் சாட்சியாக வைத்து பதவியேற்றனர்.
இதற்காக அவைத் தலைவர் லிண்ட்சே ஹோய்லுக்கு பகவத் கீதையின் புதிய பிரதி ஒன்றை கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஷைலேஷ் வர்மா வழங்கினார். முதலில் பதவியேற்ற இந்திய வம்சாவளி எம்.பி.க்களில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கும் ஒருவராவார். அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
ரிஷி சுனக் தனது பதவிப் பிரமாணத்தை ஏற்கும்போது "ஆண்டவன் மீது ஆணையாக நான் பதவியேற்கிறேன். சட்டப்படி மன்னர் சார்லஸýக்கும் அவரது வாரிசுகளுக்கும் நான் நம்பிக்கை உடையவனாக இருப்பேன். எனக்கு ஆண்டவன் உதவ வேண்டும்' என்ற சம்பிரதாய வாசகத்தை வாசித்தார்.
முதல் முறையாக எம்.பி.யாகியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண் பகவத் கீதையை சாட்சியாகக் கொண்டு பதவியேற்றார். அவர் தொழிலாளர் கட்சி சார்பில் வேல் ஆஃப் கிளாமோர்கன் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாப் பிளாக்மேன், லண்டனில் உள்ள ஹாரோ கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தினார். அவர் பகவத் கீதை, பைபிள் ஆகிய இரு புனித நூல்களையும் சாட்சியாகக் கொண்டு எம்.பி.யாகப் பதவியேற்றார்.
பிரிட்டனைச் சேர்ந்த சீக்கிய சமூகத்து எம்.பி.க்களான தான் தேசி, குரிந்தர் சிங் ஜோசன், ஹர்பிரீத் உப்பல், சத்வீர் கௌர், வாரிந்தர் சிங் ஜஸ் ஆகியோர் சீக்கிய மத புனித நூலின் வாசகத்தைக் கூறி பதவியேற்றனர். எனினும் அவர்கள் புனித நூல் எதையும் கையில் வைத்திருக்கவில்லை. சீக்கிய எம்.பி.யான பிரீத் கௌர் கில் தனது கையில் தங்களது மதத்தைச் சேர்ந்த "சுந்தர் குட்கா' பிரார்த்தனைப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார்.
கேரளத்தைச் சேர்ந்த மனநல ஆண் செவிலியரான சோஜன் ஜோசஃப் தொழிலாளர் கட்சி சார்பில் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பைபிளின் புதிய ஏற்பாடு புத்தகத்தை ஏந்தியபடி எம்.பி.யாகப் பதவியேற்றார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.க்களான பிரீத்தி படேல், கிளெய்ர் கூட்டினோ, லிபரல் டெமாக்ராட் கட்சியைச் சேர்ந்த முனீரா வில்சன் ஆகியோர் "கிங் ஜேம்ஸ் பைபிள்' புத்தகத்தை ஏந்தியபடி பதவியேற்றனர்.
பிரிட்டனில் எம்.பி.க்கள் எந்த மதத்தையும் சாராத உறுதிமொழியை வாசித்தும் பதவியேற்க வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரு சுயேச்சை எம்.பி.க்களான ஷாக்கத் ஆதாம், இக்பால் மஹ்மூத் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களைப் போலவே கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ககன் மொஹீந்திராவும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா ஆகியோரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.