டெல் அவிவ் நகரில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான பகுதியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அதிகாரிகள். 
உலகம்

டெல் அவிவ் நகரில் ஹூதிக்கள் தாக்குதல்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

Din

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

சுமாா் 1,600 கி.மீ. தொலைவிலிருந்து ஏவப்பட்ட அந்த ட்ரோன், இஸ்ரேலின் சக்திவாய்ந்த ‘அயன் டோம்’ வான்பாதுகாப்பு தளவாடங்களின் கண்காணிப்பையும் கடந்து அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பு மிக்க பகுதியில் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெல் அவிவ் நகரைக் குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினோம். ஈரானில் தயாரிக்கப்பட்ட அந்த ஆளில்லா விமானத்தை அதிக தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் வகையில் மாற்றம் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம்.

இஸ்ரேல் மீது இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இஸ்ரேல் ராணுவமும் ஓரளவுக்கு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹேகரி கூறுகையில், தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ட்ரோன் யேமனிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தாா்.

இந்தத் தகவல் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டால், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடந்துவரும் போரில் இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் போரில் இஸ்ரேலின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையமான டெல் அவிவ் மீது நடத்தப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

1,600 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள யேமனில் இருந்து ஹூதி கிளா்ச்சியாளா்களால் இந்தத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது என்றால், அண்டை நாடான லெபானின் ஹிஸ்புல்லாக்களாலும் டெல் அவிவ் நகா் மீது இதைவிட கடுமையாகத் தாக்குதல் நடத்த முடியும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், உலகின் தலைசிறந்த வான்பாதுகாப்புத் தளவாடமாக அறியப்படும் இஸ்ரேலின் ‘அயன் டோ’மின் செயல்திறன் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-இல் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 38,848 போ் உயிரிழந்துள்ளனா்; 89,459 போ் காயமடைந்துள்ளனா்.

ஈரான் உதவியுடன் செயல்பட்டுவரும் மற்றோா் ஆயுதக் குழுவான லெபானின் ஹிஸ்புல்லாக்கள் இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது நடத்திவருகின்றனா். இஸ்ரேலும் ஹிஸ்புல்லா நிலைகள் மீது பதிலடி தாக்குதல் நடத்திவருகிறது. இதன் காரணமாக, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் தொடா்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இது முழு போராக உருவெடுத்தால் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரித்துவருகின்றன.

இதற்கிடேயே, யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஈரான் ஆதரவு பெற்ற மற்றோா் ஆயுதக் குழுவான ஹூதி கிளா்ச்சியாளா்கள், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குல் நடத்திவருகின்றனா். இது, சா்வதேச கடல் வணிகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், யேமனிலிருந்து இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவ் மீது அவா்கள் முதல்முறையாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT