அமெரிக்க அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஜோ பைடனைவிட, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ்தான் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிடுவதற்குத் தகுதியானவா் என்று அவரது ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலானவா்கள் கருதுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மக்கள் கருத்தாய்வு நிறுவனமான ‘ஏபி-என்ஓஆா்’ வெளியிட்டுள்ள அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஜனநாயகக் கட்சியின் 10 உறுப்பினா்களில் 6 போ் பைடனைவிட கமலா ஹாரிஸ்தான் அதிபா் பதவிக்குப் பொருத்தமானவா் என்று கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது மூப்பு காரணமாகவும் டிரம்ப்புக்கு எதிரான நேரடி விவாத்தின்போது தடுமாறியதாலும் அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து பைடன் விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சிக்குள் குரல்கள் வலுத்துவரும் சூழலில் இந்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.