ஐக்கிய பேரரசின் மன்னர் சார்லஸ் ரூ. 4 கோடிக்கு விருந்து ஏற்பாடு செய்த பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன்.
2022ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிறகு, மன்னர் சார்லஸ் பதவியேற்றார். இவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய பேரரசுக்கும் பிரான்ஸுக்கும் இடையே நல்லுறவினை ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் சென்றிருந்தார்.
மன்னரை வரவேற்பதற்காக வெர்செய்ல்ஸ் மாளிகையில் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மக்ரோன் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
விருந்தில் அரிய வகை பிரெஞ்சு கல் இறால்கள், நண்டுகள், ஷாம்பெயின் என்ற உயர்வகை மதுவில் சமைக்கப்பட்ட இறைச்சிகள் மற்றும் கிரேட்டின் முறையில் சமைக்கப்பட்ட பிரெஞ்சு காளான்கள் போன்ற உயர்தரத்திலான உணவுவகைகள் இடம்பெற்றிருந்தன.
அதுமட்டுமின்றி, பல்வேறு வகையான விண்டேஜ் ஒயின்கள், உயர்வகை ஷாம்பெயின் மற்றும் உலகளவிலான தரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீஸ்கள் முதலானவையும், இனிப்புகளில் லிச்சி பிரெஞ்சு மாக்ரூன்கள், ரோஜா மற்றும் ராஸ்பெர்ரி சொர்பெத் போன்றவையும் இடம்பெற்றிருந்தன.
ஆங்கில நடிகர் ஹக் கிராண்ட், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து அணியின் மேலாளர் அர்சென் வெங்கர் மற்றும் மிக் ஜாகர் போன்ற பிரபல நட்சத்திரங்கள் உள்பட சுமார் 150 பேர் இந்த விருந்தில் பங்கேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மன்னர் வருகையின்போது ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தின் மொத்த செலவுகளைக் கணக்கிட்டனர். வெளிவந்த தரவுகளின்படி, விருந்திற்காக சுமார் ரூ. 4.2 கோடி வரையில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றில் ரூ. 1.4 கோடி உணவுக்காகவும் மற்றும் ரூ. 38 லட்சம் பானங்களுக்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளது.
விருந்தில் பேசிய மன்னர் சார்லஸ், ``பிரான்சில் எனது தாயாரான மறைந்த ராணிக்கு வழங்கப்பட்ட அஞ்சலி மூலம் நானும் எனது குடும்பத்தினரும் பெரிதும் ஈர்க்கப்பட்டதன் மூலம் அதிபர் மக்ரோனின் தாராள மனப்பான்மையை அறிகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும், பிரெஞ்சு அரசு ஏற்கெனவே இதுபோன்று ஆடம்பர விருந்து அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது; இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2023ஆம் ஆண்டில் லூவர் அருங்காட்சியகத்தில் ரூ. 3.7 கோடி செலவில் விருந்தளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.