இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: இந்தோனேசியாவின் ஜாபா தீவுக்கு வடக்குக் கடலோரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அது ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 2.70 கோடி மக்கள்தொகை கொண்ட தீவுக்கூட்டமான இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனேசியா அருகே 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.