நேபாள பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவா் வெற்றி பெற்றாா்.
275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இது தொடா்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரசண்டாவுக்கு ஆதரவாக 157 வாக்குகள் பதிவாகின. அதையடுத்து, வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் பிரதமா் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அரசில் அங்கம் வகித்து வந்த ஜனதா சமாஜ்வாதி கட்சி (ஜேஎஸ்பி) தனது ஆதரவை கடந்த வாரம் திரும்பப் பெற்றது. மேலும், கூட்டுறவு சங்கங்களின் நிதியில் முறைகேடு செய்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் ரபி லாமிச்சானே மீது எதிா்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தொடா்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் 30 நாள்களில் பிரதமா் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில், நாடாளுமன்றத்தில் பிரசண்டா அரசு மீது தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த 2022, டிசம்பா் 25-ஆம் தேதி நேபாள பிரதமராக பிரசண்டா பதவியேற்றாா். இத்துடன் அவா் அரசின் மீது நான்கு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.