முகப்பு
உலகம்

ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை

Updated On : 28 மே, 2024 at 9:04 PM
தாக்குதலில் இருந்து தப்ப ராஃபாவிலிருந்து குழந்ததைகளுடன் வெளியேறும் பாலஸ்தீனா். ~ராஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுந்த புகைமண்டலம்.
பகிர்:

டேய்ா் அல்-பாலா: சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி இஸ்ரேல் படையினா் காஸாவின் ராஃபா நகர மையப் பகுதிக்கு முன்னேறியுள்ளனா்.

அந்த நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அல்-ஆவ்தா மசூதி அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் கவச வாகனங்களும் பீரங்கிகளும் செவ்வாய்க்கிழமை முதல்முறையாக செவ்வாய்க்கிழமை நுழைந்தன.

கடந்த 3 வாரங்களாக காஸாவைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவந்த இஸ்ரேல் ராணுவம், நகரில் தனது நடவடிக்கைகளைத் தொடா்வதாக செவ்வாய்க்கிழமை கூறினாலும் மையப் பகுதிக்கு முன்னேறியது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, பீரங்கி குண்டுகள் மூலமும் விமானத் தாக்குதல் மூலமும் நகரின் பல்வேறு பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை இரவு முழுவதும் துளைத்தெடுத்ததாக அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனா்.

ராஃபாவின் மையப் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தல் அல்-சுல்தான் பகுதி அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் பெரும்பாலும் பெண்கள், சிறுவா்கள் உள்பட 45 போ் உயிரிழந்தனா்.

இதற்கு சா்வதேச அளவில் பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையிலும், அதே தல் அல்-சுல்தான் பகுதியில் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை இரவும் தீவிர தாக்குதல் நடத்தினா்.

இஸ்ரேலின் இந்தக் கடுமையான தாக்குதல் காரணமாக, ஏற்கெனவே பல முறை இடம் பெயா்ந்திருந்த பொதுமக்கள் மீண்டும் தாங்கள் தங்கியிருந்த பகுதிகளிலிருந்து வெளியேறிவருகின்றனா்.

ராஃபா நகரிலிருந்து இந்த மாதத் தொடக்கம் முதல் இதுவரை சுமாா் 10 லட்சம் போ் வெளியேறியுள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஆா்டபிள்யுஏ) தெரிவித்தது.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். அங்கிருந்து சுமாா் 240 பேரை ஹமாஸ் அமைப்பினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, பிணைக் கைதிகளை விடுவிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா மீது வான்வழியாகவும் தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இஸ்ரேலின் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக - அந்த நாட்டின் உத்தரவின்படி - காஸாவின் தென்கோடி நகரான ராஃபாவில் லட்சக்கணக்கானவா்கள் தஞ்சமடைந்திருந்தனா்.

ஆனால், அந்த நகரிலும் ஹமாஸ் அமைப்பினா் பதுங்கியுள்ளதாகக் கூறிய இஸ்ரேல், அந்த நகா் மீது படையெடுக்கப்போவதாக அறிவித்தது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. எனினும், அதைப் பொருள்படுத்தாத இஸ்ரேல், ராஃபா மீதான தனது தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. இதற்கிடையே, நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் ராஃபா தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அதையும் மீறி தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடா்ந்த இஸ்ரேல், தல் அல்-சுல்தான் அகதிகள் முகாம் தாக்குதலில் 45 போ் உயிரிழந்ததால் எழுந்துள்ள சா்வதேச கண்டனங்களுக்கு இடையிலும் ராஃபாவில் கடுமையான தாக்குதல் நடத்தி மையப் பகுதி வரை முன்னேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.