ஈரானில் பல்கலைக் கழகத்தில் இளம்பெண் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பெண்கள் மீதான ஈரானின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளாடை மட்டும் அணிந்தவாறு அப்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
எனினும் அவரைக் கைது செய்த அந்நாட்டு காவல் துறையினர், அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பிறகு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாடை மட்டும் அணிந்து போராட்டம்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆஸாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்ளாடை மட்டுமே அணிந்தவாறு வளாகத்தில் நடந்து செல்லும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஈரானின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் நோக்கத்தில் அம்மாணவி, உள்ளாடை மட்டுமே அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த விடியோவில், பல்கலைக் கழக பாதுகாவலர்கள் அம்மாணவியை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். அவர் வளாகத்தில் உள்ளாடையுடன் நடந்து செல்ல முயற்சிக்கிறார்.
பல்கலைக் கழக வளாகத்தில் இருந்து சாலையில் நடந்து செல்கிறார். வளாகத்திலும் சாலையிலும் இருப்போர் அப்பெண்ணை விடியோ பதிவு செய்கின்றனர். அப்போது காரில் வந்த காவல் துறையினர் அப்பெண்ணை கைது செய்து அழைத்துச்செல்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய பல்கலைக் கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப், ''முறையற்ற உடை அணிந்திருந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
உள்ளாடை அணிந்து போராடியது ஏன்?
ஈரானில் பெண்களுக்கு கடும் ஆடைக் கட்டுப்பாடு உள்ளது. இதற்கு எதிராக அம்மாணவி போராட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் அந்த விடியோவில் பலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
பல்கலைக் கழக வளாகத்தில் முறையாக ஹிஜாப் அணியாததால், ஹிஜாப் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாணவியைத் தாக்கியதாகவும், இதனால் தனது உடலையே ஆயுதமாக மாற்றி, உள்ளாடை மட்டுமே அணிந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஹிஜாப் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பார்க்கும்போது அம்மாணவி ஹிஜாப் அணியவில்லை என்றும், இதனால், ஹிஜாப் அணிய வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவரின் ஆடைகளை அதிகாரிகள் கிழித்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அப்பெண் காயமடைந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த தூணில் அம்மாணவியை அதிகாரிகள் பிடித்து இடித்ததால் ஆத்திரமடைந்த அம்மாணவி, உள்ளாடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த விடியோவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய அரசாங்கத்துக்கு எதிரான இளம்பெண்ணின் போராட்டம் இது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற கோரிக்கைகளும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் தேர்தல்! இழுபறியில் இறுதிக்கட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.