முகப்பு
உலகம்

புடவை அணிவது புற்றுநோயை உண்டாக்கலாம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

புடவையை இறுக்கமாக அணிவதால் தோல் புற்றுநோய் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:19 AM
புடவைகள் - கோப்புப் படம்
பகிர்:

புடவை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவரா நீங்கள்? இனி எச்சரிக்கையுடன் இருங்கள். புடவையை இறுக்கமாக அணிவதால் தோல் புற்றுநோய் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிகார், மகாராஷ்டிர மாநிலத்தில் இரு பெண்களை மருத்துவர்கள் நடத்திய சோதனையில் இந்த அதிர்ச்சி முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

புடவை அணிவது குறித்து ஆய்வு

மகாராஷ்டிர மாநிலம் வர்தாவிலுள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் பிகாரிலுள்ள மதுபானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் புடவை அணிவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பெண்கள் புடவை அணியும்போது உடுத்தும் உள்பாவாடையை இடுப்பு வடத்தில் இறுக்கமாக அணிகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட அழற்சி, தோல் புண் ஏற்படுத்த வழிவகுக்கிறது. சில நேரங்களில் இவை தோல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்த நிகழ்வு புடவைப் புற்றுநோய் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், இடுப்பில் அணியும் இறுக்கமான பாவாடையே காரணமாகப் பார்க்கப்படுவதால், இது பாவாடை புற்றுநோய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

70 நாடுகளில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள பிஎம்ஜே ஆய்வு நிறுவனமும் பாவாடை புற்றுநோய் என்றே குறிப்பிட்டு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள பெண்கள் புடவை அணியும்போது பாவாடை உடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் இரு பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலில் 70 வயது பெண் ஒருவர், தோல் புண் ஏற்பட்டு மிகுந்த வலியுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். புடவை அணிவதை வழக்கமாகக் கொண்ட அப்பெண் அணிந்திருந்த பாவாடை அருகே புண் ஏற்பட்டிருந்தது. இடுப்பு வடத்தில் நிறமிகள் அற்று இருந்துள்ளது. கடந்த 18 மாதங்களாக ஆறாமல் காயம் பெரிதாகி வருவதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மருத்துவர்கள் பயாப்ஸி பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அப்பெண்ணுக்கு மார்ஜோலின் புண் ஏற்பட்டுள்ளதாகவும், இது தோல் புற்றுநோய் ஏற்பட வழிவகுத்ததையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மற்றொரு ஆய்வில் 60 வயது பெண் பங்கேற்றார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்தபோது 2 ஆண்டுகளாக இடுப்பு வடத்தில் புண் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கடந்த 40 ஆண்டுகளாக புடவை அணிவதை வழக்கமாகக் கொண்டவர். எனினும் பாவாடை உடுத்தாமல், வெறும் புடவை மட்டுமே இறுக்கமாக அணிந்துவந்துள்ளார்.

இடுப்பு வடத்தில் இருந்த புண்ணை பரிசோதித்ததில், அவருக்கும் மார்ஜோலின் புண் இருப்பது உறுதியானது. இவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் அவரின் நிணநீர் கணுக்களிலும் பரவியது தெரியவந்தது.

மார்ஜோலின் புண் என்றால் என்ன?

மார்ஜோலின் புண் என்பது மிகவும் அரிதாக உடலில் ஏற்படும், ஆனால் மிகவும் ஆபத்தானது. இது நாள்பட்ட தீக் காயம், ஆறாத காயங்கள், கால் புண், ஊசி போட்ட தழும்புகள், பாம்பு கடித்த தழும்புகளை இது ஆறவிடாமல் பரவச்செய்யும். மருத்துவத் துறையில் இதுவே மார்ஜோலின் புண் எனப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய மருத்துவர்கள், இடுப்பில் கொடுக்கப்படும் நிலையான அழுத்தம் பெரும்பாலும் தோல் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இது இறுதியில் சிதைந்து அரிப்பு அல்லது புண் உருவாகிறது.

இறுக்கமான உடைகள் மூலம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால், புண் முழுமையாக ஆறாது. நாள்பட்ட குணமடையாத காயம் எதிர்மறையான விளைவுகலை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடுகின்றனர்.

புடவைகளை அணியும்போது இறுக்கமாக அல்லாமல், உடலுடன் பொருந்தும் வகையிலான லேசான பாவாடைகளை அணிய வேண்டும். இடுப்பு வடத்தில் காயம் ஏற்பட்டால் தளர்வான உடைகளை அணிந்து, காயம் குணமடைய வாய்ப்பளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.