பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 9) காலை 9மணியளவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர்; பலரும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில், பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பின்போது, சுமார் 100 பயணிகள் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட இன்று குறைவாக இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பைகளுடன் ரயில் நிலையத்திற்குள் நுழையும் ஒருவர்தான், இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடப்பதாகவும் கூறுகின்றனர். இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சமீப காலமாக, வடமேற்கில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களையும், தெற்கில் வளர்ந்து வரும் பிரிவினைவாத கிளர்ச்சியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.
இதையும் படிக்க: பரபரப்பை ஏற்படுத்தும் டிரம்ப் - எலான் - ஸெலென்ஸ்கி உரையாடல்?
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் கனிம வளங்களைச் சுரண்டுவதாகக் கூறி, பலூசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பினர் கிளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பலூசிஸ்தான் அளவில் பெரியதாகவும், மக்கள்தொகை குறைவாகக் கொண்ட மாகாணமாக உள்ளது.
இங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவ அமைப்பினருடன் இஸ்லாமியப் போராளிகளும் சேர்ந்துள்ளனர். கனிம வளங்களை எடுப்பதற்காக வெளிநாட்டினரை பாகிஸ்தான் நியமித்துள்ளதால், வெளிநாட்டினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப்பாக, சீன நாட்டினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம், கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே சீன நாட்டினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். இந்தக் குண்டுவெடிப்புக்கு பி.எல்.ஏ. பொறுப்பேற்றது. அதிலிருந்து, பலூசிஸ்தான் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பணிபுரியும் சீன மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானை பெய்ஜிங் கோரியது.
நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் பாகிஸ்தானில் வன்முறை 90 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் 328 சம்பவங்களில் 722 பேர் பலியானதுடன், 615 பேர் காயமடைந்துள்ளனர். சில குறிப்பிட்ட பகுதிகளில்தான் தாக்குதல்கள் அதிகம் நடத்தப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டில் 1523 பேர் பலியான நிலையில், 2024-ன் மூன்றாம் காலாண்டிலேயே 1534 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.