ரஷியா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, வியாழக்கிழமை காலை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தெற்கு அஸ்ட்ராகான் மாகாணத்திலிருந்து ரஷியா, உக்ரைன் மீது ஏவியிருக்கிறது.
இந்தப் போரில், ரஷியா முதல் முறையாக, தொலைதூர ஏவுகணையை தாக்குதலுக்குப் பயன்படுத்தியிருப்பது போர் தீவிரமடைவதைக் குறிப்பதைக் காட்டுவதாக உள்ளது.
ரஷிய பகுதிகளுக்குள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தத் தொடங்கியதையடுத்து, ரஷியாவும் தனது பங்குக்கு போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கி கிட்டத்தட்ட 1000 நாள்கள் கடந்துவிட்டது.
இந்த நிலையில்தான், இதுவரை போரில் பயன்படுத்தாத, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தாக்குதலுக்கு ரஷியா பயன்படுத்தியிருக்கிறது. எனினும், இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தங்களின் ‘அட்டாக்கம்ஸ்’ ரக ஏவுகணைகளை ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் வீச உக்ரைனை அனுமதித்ததற்குப் பதிலடியாக ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தின்பேரில் உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள தங்கள் தூதரகத்தை அமெரிக்கா புதன்கிழமை மூடியது.
பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட, விமானத்திலிருந்து வீசப்படக்கூடிய ‘ஸ்டாா்ம் ஷேடோ’ ஏவுகணை மூலமும் ரஷியா மீது உக்ரைன் முதல்முறையாக புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியதா என்பது குறித்து இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
போரில் உக்ரைனுக்கு எதிராகச் சண்டையிட வட கொரியாவிலிருந்து சிறப்புப் படை வீரா்களை ரஷியா அழைத்துவந்ததற்குப் பதிலடியாக இந்த அனுமதியை பிரிட்டன் வழங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.
அட்டாக்கம்ஸ் ஏவுகணையை ரஷியா மீது வீச அமெரிக்கா அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து பிரிட்டனும் அத்தகைய அனுமதியை வழங்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.