ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத குண்டு, புதன்கிழமை வெடித்துச் சிதறியது.
மியாஷாகி விமான நிலையத்தின் ஓடுபாதைப் பகுதியில் குண்டு வெடித்ததில் பள்ளம் ஏற்பட்டதால், 80 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் குண்டு
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது அமெரிக்கா ஆயிரக்கணக்கான குண்டுகளை போட்டது. போர் முடிந்த பிறகு, வெடிக்காத குண்டுகள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்மேற்கு ஜப்பானில் அமைந்துள்ள மியாஷாகி விமான நிலையத்தின் விமான ஓடுதளப் பாதையில் புதைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில் ஓடுதளத்தில் விமானம் இல்லாததால், விமானங்களுக்கும், பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
விமான ஓடுதளத்தில் மட்டும் பெருமளவிலான பள்ளம் ஏற்பட்டதால், புறப்படவிருந்த மற்றும் தரையிறங்க இருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதனால், புதன்கிழமை மட்டும் 80 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இரவோடு இரவாக விமான நிலையத்தின் ஓடுதளம் முழுமையாக சரிசெய்யப்பட்டு, வியாழக்கிழமை காலை முதல் வழக்கமான விமான சேவை தொடங்கியுள்ளது.
230 கிலோ எடை குண்டு
இரண்டாம் உலகப் போரின்போது புதைக்கப்பட்ட குண்டால்தான் விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டது என்று ஜப்பான் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது.
இந்த குண்டின் எடை சுமார் 230 கிலோ என்றும், இது வெடித்ததில் 7 மீட்டர் சுற்றளவில், ஒரு மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் போரில் கட்டப்பட்ட விமான நிலையம்
இரண்டாம் உலகப் போரின்போது, 1943ஆம் ஆண்டில் ஜப்பான் கடற்படையின் விமானப் பயிற்சிக்காக கட்டப்பட்டதுதான் தற்போதைய மியாஷாகி விமான நிலையம். இங்கிருந்து, சில ஜப்பானிய விமானிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த விமான நிலையம் கட்டப்பட்ட பகுதியில், அமெரிக்காவால் போடப்பட்ட வெடிக்காத பல வெடி குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.