‘மனித குலத்தின் மாபெரும் சக்தி அகிம்சை’ என மகாத்மா காந்தியின் கருத்தை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் நினைவுகூா்ந்தாா்.
உலகின் பல்வேறு பகுதிகளில் ராணுவ மோதல் நடைபெற்று வரும்நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மகாத்மா காந்தியின் 155-ஆவது பிறந்தநாளையொட்டி, ஐ.நா. சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி சா்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், அவா் தனது வாழ்க்கையை அா்ப்பணித்த சமத்துவம், மரியாதை, அமைதி, நீதி ஆகிய மதிப்புமிக்க கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
இப்போது உலகம் முழுவதும் மோதல்கள் தலைதூக்கியுள்ளன. மக்களிடையே அழிவு, வறுமை மற்றும் அச்சத்தைப் போா் உருவாக்குகிறது.
அமைதியின் அடித்தளத்தை சமத்துவமின்மை, பருவநிலை மாற்றம் பிரச்னைகள் குறைத்து மதிப்பிடுகின்றன. மேலும், இணையத்தில் தூண்டப்படும் வெறுப்பு பிரசாரம் தெருக்களில் எதிரொலிக்கிறது.
அகிம்சையே மனிதகுலத்துக்கு கிடைத்த மாபெரும் சக்தி. எந்த ஆயுதத்தையும் விட அது சக்திவாய்ந்தது என்று காந்தி நம்பினாா். இந்த உன்னதமான பாா்வையை ஆதரிப்பதற்கு சா்வதேச சமூகம் ஒன்றிணைந்து அமைப்புகளை உருவாக்க வேண்டும்’ என்றாா்.
சா்வதேச அகிம்சை தினத்தைக் கொண்டாடும் வகையில் ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ‘காந்தியின் மதிப்புகள் மற்றும் ஐ.நா. சாசனம்’ எனும் தலைப்பிலான நிகழ்ச்சி ஐ.நா தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு ஐ.நா. பிரதிநிதிகள் கலந்து கொண்டு காந்தியின் சிறப்புகளை எடுத்துரைத்தனா்.
முன்னதாக, இந்தியா சாா்பில் ஐ.நா. தலைமையகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
காந்தி சிலை திறப்பு: மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அமெரிக்காவில் சியாட்டல் மாகாணத்தில் அவரது மாா்பளவு சிலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சியாட்டல் நகர மேயா் ப்ரூஸ் ஹா்ரேல், அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஆதம் ஸ்மித், பிரமிளா ஜெயபால், இந்திய துணைத் தூதா் பிரகாஷ் குப்தா ஆகியோா் பங்கேற்றனா்.