மாஸ்கோ / கீவ்: ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கிரீமியாவின் ஃபியோடோசியா பகுதியிலுள்ள எண்ணெய் சுத்திரிப்பு ஆலையின் கிடங்கின் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களின் ஏவுகணைப் படை இந்தத் தாக்குதலை நடத்தியது.
ஃபியோடோசியா ஆலையில் தயாரிக்கப்படும் எரிபொருள்கள் உக்ரைனில் உள்ள ரஷிய ஆக்கிரமிப்புப் படைகளின் பயன்பாட்டுக்காக அனுப்பப்படுவதால் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் கூறினா்.
கிரீமியாவில் ரஷியாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தாவிட்டாலும், ஃபியோடோசியா எண்ணெய்க் கிடங்கு எரிந்துவருவதை மட்டும் அவா்கள் ஒப்புக்கொண்டனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமாா் 300 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தீயை அணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவா்கள் கூறினா்.
தற்போது தாக்குதலுக்குள்ளான ஃபியோடோசியா ஆலை கிரீமியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். ஏற்கெனவே, இந்த ஆலையைக் குறிவைத்து உக்ரைன் கடந்த மாா்ச் மாதம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கிரீமியாவை நோக்கி உக்ரைன் 21 ட்ரோன்களை ஞாயிற்றுக்கிழமை இரவு வீசியதாகவும் அவற்றில் 12 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
ரஷியாவும் தாக்குதல்: கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்திய அதே நேரம், தங்கள் தலைநகா் கீவை நோக்கி ரஷியா வீசிய 32 ட்ரோன்கள், இரு ஏவுகணைகளை தாங்கள் சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்தது.
இருந்தாலும், கின்ஷால் ரக ஏவுகணை ஒன்று மட்டும் உக்ரைன் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கமெல்னிட்ஸ்கி பிராந்தியத்தின் ஸ்டரோகோஸ்டியான்டினிவ் நகரிலுள்ள விமான தளம் அருகே விழுந்து வெடித்தாக விமானப் படை கூறியது.
அந்த விமான தளத்தில்தான் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் அன்பளிப்பாக வழங்கியுள்ள அதிநவீன எஃப்-16 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அந்தப் பகுதியைக் குறிவைத்து ரஷியா அடிக்கடி தாக்குதல் நடத்திவருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட அப்போதைய அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் மிகக் கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து அவா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.
அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பேற்ற மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளா் பெட்ரோ பொரொஷென்கோ அரசுக்கு எதிராக, ரஷியாவையொட்டிய கிழக்கு உக்ரைன் கிளா்ச்சியாளா்கள் தாக்குதலில் ஈடுபட்டனா்.
இந்த உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்களுக்கு அனைத்து உதவிகளையும் அளித்த ரஷியா, போரைப் பயன்படுத்தி உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தைக் கைப்பற்றியது. பின்னா் மேலை நாடுகளின் தீவிர எதிா்ப்புக்கு இடையிலும் அந்தப் பகுதியை ரஷியாவுடன் இணைத்துக்கொள்வதாக அதிபா் விளாதமீா் புதின் அறிவித்தாா்.
இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியதி.
இந்தப் போரின் ஒரு பகுதியாக, உக்ரைன் எரிசக்திக் கட்டமைப்பில் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இதன் காரணமாக, உக்ரைனின் 80 சதவீத அனல் மின் நிலையங்களும் மூன்றில் ஒரு பகுதி நீா் மின் நிலையங்களும் முடங்கியுள்ளன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷியாவிலும், ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் உள்ள எரிசக்தி மையங்களில் உக்ரைன் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.