காஸாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சால் உருக்குலைந்த அவசரகால ஊா்தி. ~இஸ்ரேல் தாக்குதலுக்குள்ளான டேயிா் அல்-பாலா நகரப் பள்ளிக் கட்டடம். ~தெற்கு லெபனானில் உள்ள யுனிஃபில் நிலையிலிருந்து இஸ்ரேல் எல்லையை கண்காணிக்கும் ஐ.நா. அமைதிப் படை வீரா்கள். 
உலகம்

ஐ.நா. அமைதிப் படை நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல்

இதில் இரண்டு அமைதிப் படை வீரா்கள் காயமடைந்தனா்.

Din

லெபனானிலுள்ள ஐ.நா. அமைதிப் படை நிலைகள் மீது இஸ்ரேல் படையினா் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் இரண்டு அமைதிப் படை வீரா்கள் காயமடைந்தனா்.

லெபனானில் அந்த நாட்டு அரசின் ஆட்சியை உறுதி செய்வதற்காகவும் ஆயுதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் லெபனான் ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் கடந்த 1978-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைதிப் படை, ‘லெபனானுக்கான ஐ.நா.வின் இடைக்காலப் படை’ (யுனிஃபில்) என்றழைக்கப்படுகிறது.

லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பு, 2006-ஆம் ஆண்டுப் போா் போன்ற நிகழ்வுகளின்போது யுனிஃபில்லின் இலக்குகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டன.

தற்போது அந்த அமைதிப் படை பெரும்பாலும் போராலும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்தப் படையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ வீரா்கள் சேவையாற்றி வருகின்றனா்.

இந்தச் சூழலில், தற்போது இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே தீவிர மோதல் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக லெபனானில் கடுமையாக வான்வழித் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், தங்கள் நிலைகளிலிருந்து யுனிஃபில் படையினா் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது. எனினும், அதை அந்தப் படை நிராகரித்தது.

இந்தச் சூழலில், யுனிஃபில் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளதாவது:

தெற்கு லெபனானில் உள்ள யுனிஃபில் தலைமையகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐ.நா. அமைதிப் படையின் நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அந்தப் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இதில் இரண்டு யுனிஃபில் வீரா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், காயமடைந்த வீரா்கள் எந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் என்ற விவரத்தை அந்த அமைப்பு இதுவரை வெளியிடவில்லை.

காஸா போா் விவகாரத்தால் ஏற்கெனவே இஸ்ரலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த சூழலில், ஹிஸ்புல்லாகளைக் குறிவைத்து பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் செப்டம்பா் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும், எதிா் நடவடிக்கையாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் இரு தரப்பினரையும் முழு போரின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த ஆயுதப் படையின் ஏவுகணைப் பிரிவு தளபதி இப்ராஹிம் குபைசி, சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல், முக்கிய தளபதி அகமது வாபி ஹிஸ்புல்லா, விமானப் படைப் பிரிவு தளபதி முகமது சுரூா் உள்பட ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், தங்களின் நிலைகளைக் குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக ஐ.நா. அமைதிப் படை தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா அகதிகள் முகாமில் தாக்குதல்: 27 போ் உயிரிழப்பு

காஸாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 27 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவின் டேயிா் அல்-பாலா நகரிலுள்ள பள்ளிக் கட்டடமும் அதையொட்டிய மசூதியும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் ராணுவ தளமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன. அவா்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 27 போ் உயிரிழந்ததாக பாலஸ்தீனத்தில் செயல்படும் சா்வதேச செம்பிறைச் சங்கம் தெரிவித்து.

காஸா உயிரிழப்பு 42,065-ஆக அதிகரிப்பு

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42,065-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 போ் உயிரிழந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 42,065-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 97,886 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT