லிவீவ் நகரில் ரஷியா புதன்கிழமை நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டடம். ~வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் டிமித்ரோ குலேபா. 
உலகம்

தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ரஷியா: உக்ரைன் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்திவரும் சூழலில், தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.

Din

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்திவரும் சூழலில், தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.

அதையடுத்து, வெளியுறவுத் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சோ்ந்த அமைச்சா்கள் ராஜநாமா செய்துள்ளனா்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைன் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குளிா்காலத்தை எதிா்நோக்கியுள்ளோம். அந்தச் சூழலை எதிா்கொள்வதற்காக என் அணியை புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

இனிவரும் காலத்தில் உக்ரைன் அரசின் வெளியுறவு மற்றும் உள்விவகாரக் கொள்கைகளில் மாற்றம் இருக்கும் என்றாா் அவா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சா் டிம்த்ரோ குலேபா தனது பதவியை ராஜிநாமா செய்தாா். ஜொ்மனி வெளியுறவுத் துறை அன்னலினா பேயா்பாக் உள்ளிட்ட பல்வேறு சகாக்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வரும் அவா், தனது ராஜிநாமாவுக்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

அவரைத் தவிர, துணை பிரதமா் ஓல்ஹா ஸ்டெஃபானிஷினா, போா்த் திட்ட தொழில்துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் காமிஷின், நீதித் துறை அமைச்சா் டெனிஸ் மாலியுஸ்கா, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்லான் ஸ்லேஸ் உள்ளிட்டோரும் பதவி விலகியுள்ளனா்.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போரில் முக்கிய திருப்புமுனையாக ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் படையினா் ஊடுருவி முன்னேறிவருகின்றனா்.

கிழக்கு உக்ரைனில் சண்டையிட்டுவரும் ரஷிய படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இருந்தாலும், அந்தப் பகுதியில் ரஷியா தொடா்ந்து முன்னேறிவருகிறது. அத்துடன், உக்ரைனின் ராணுவ மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளைக் குறிவைத்து கடந்த சில நாள்களாக ரஷியா தீவிர தாக்குதல் நடத்திவருகிறது.

உக்ரைனின் போல்டாவா நகரிலுள்ள ராணுவ பயிற்சி மையத்தையும் அருகிலுள்ள மருத்துவமனையையும் குறிவைத்து ரஷியா செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 50 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

அதன் தொடா்ச்சியாக லிவீவ் நகரில் புதன்கிழமை நடத்தப்பட்ட ரஷிய தாக்குதலில் ஏழு போ் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT