பேஜா்களுக்குள் வெடிபொருள் எப்படி? உலகின் முதல் தொழில்நுட்பத் தாக்குதலா இது?
பேஜா்களுக்குள் வெடிபொருள் எப்படி வந்தது என்பதும் உலகின் முதல் தொழில்நுட்பத் தாக்குதலாக இது இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலில், மிகச் சாதாரண தொழில்நுட்ப சாதனமே மிகப்பெரிய தாக்குதல் கருவியாக மாற்றப்பட்டிருப்பது உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, ஹிஸ்புல்லாக்களை குறி வைத்து, இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பு, பேஜர்களுக்குள் வெடிபொருள்களை வைத்து, தயாரித்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, ஹிஸ்புல்லாக்கள், இருப்பிடங்களைக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள் குறைவாக இருப்பதால் தொலைத்தொடர்புக்கு பேஜர்களை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பேஜர்களுக்கு அளவில்லா தகவல்கள் அல்லது பேஜரை சூடாக்கும் குறியீடுகளை வந்துகொண்டே இருந்தபோது, அது வெடித்து 11 பேர் பலியாகினர், 2800 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்டை நாடான இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் காஸா போா் விவகாரத்தால் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது இஸ்ரேலின் அதீத திறன் கொண்ட தொழில்நுட்பத் தாக்குதலாக இருக்கும் என்ற அச்சம் எழுந்திருக்கும் நிலையில், இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது, இந்த பேஜர்கள், தைவானிலிருந்து செயல்படும் கோல்டு அப்போல்லோ நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது, இதன் மூலம், இந்த பேஜர்கள் எங்கிருந்து செயல்படுகிறது என கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால், ஹிஸ்புல்லா போராளிகள் இதனையே பயன்படுத்துகிறார்கள்.
எப்படியோ, இஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகள், பேஜர்கள் தயாரிப்புப் பணியின்போதே, அவற்றுக்குள் வெடிபொருள்களையும் நுழைத்திருக்கிறார்கள். பிறகு, அவை வழக்கம் போல ஹிஸ்புல்லா குழுக்கள் மூலம் வாங்கி, அவர்களது போராளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன்புதான், தைவான் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட சுமார் 5,000 பேஜர்களை ஹிஸ்புல்லா வாங்கியிருக்கிறது. ஆனால், தயாரிப்புப் பணியின்போதே, அதற்குள் ஊடுருவிய இஸ்ரேலின் மொஸ்ஸாத் அமைப்பு வெடிபொருள்களை வைத்துவிட்டது. அதோடு, பேஜருக்கு தொடர்ந்து அளவில்லா தகவல்கள் வரும்போது அல்லது குறியீடு தகவல் மூலம், அந்த வெடிபொருள்கள் வெடிக்கும் வகையில், ரிமோட்-ட்ரிகர் தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில்தான் செவ்வாயன்று மதியம், பேஜர்களுக்கு ஒரு குறியீடுகளுடன் ஹிஸ்புல்லா தலைமையிடமிருந்து வருவது போன்ற தகவல் வந்துள்ளது. ஆனால், இவை தகவலைச் சொல்ல வரவில்லை, மாறாக பேஜரிலிருந்த வெடிபொருள்களை வெடிக்கச் செய்யும் குறியீடாக மாறியிருக்கிறது. இந்த குறியீடு வந்ததும், பேஜர்கள் சூடாகியிருக்கின்றன. சூடானதும் வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. அதன்பிறகு நடந்த அனைத்தும் செய்தியாக ஏற்கனவே வெளிவந்துவிட்டது.
இந்த தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக லெபனான் அதிகாரிகள் உறுதியாகக் கூறினாலும், இது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.
இது குறித்து ஹிஸ்புல்லாக்களின் அதிகாரபூா்வ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ஹிஸ்புல்லா படையினா் பயன்படுத்தும் புதிய வகை பேஜா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறின. முதலில் அந்த பேஜா்கள் தானாகவே சூடேறின. பிறகுதான் அவை ஒவ்வொன்றாக வெடித்துச் சிதறின. இதில் ஹிஸ்புல்லா படையைச் சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா் என்றாா்.
லெபனான் சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபியாத் கூறுகையில், லெபனான் முழுவதும் பேஜா்கள் வெடித்துச் சிதறியதில் 2,750 போ் காயமடைந்தனா்; அவா்களில் சுமாா் 200 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றாா்.
ஈரான் தூதரும் காயம்
பேஜா் வெடித்துச் சிதறியதில் காயமடைந்தவா்களில் லெபனானுக்கான தங்கள் நாட்டுத் தூதா் முஜ்தபா அமானியும் ஒருவா் என்று ஈரான் அரசுக்குச் சொந்தமான ‘இா்னா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தொலைத் தொடா்பு சாதனங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று ஹிஸ்புல்லாக்கள் எச்சரிக்கையாக இருந்துவந்தனா். அதனால்தான், கைப்பேசிகளை (செல்ஃபோன்கள்) பயன்படுத்தினால் அவற்றைக் கொண்டு ஹிஸ்புல்லா படையினரின் இருக்குமிடத்தைத் தெரிந்துகொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்று பேஜர்களை பயன்படுத்தினர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்த பேஜா்களையே ஆயுதமாக்கி அவா்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரின் பின்னணி..
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில் 41,252 பாலஸ்தீனா்கள் பலியாகினர். இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனா்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவருகிறது. இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தி, லெபனான் எல்லைப் பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ள இஸ்ரேலியா்களை அந்தப் பகுதிக்கு மீண்டும் அழைத்துவருவது இந்தப் போரின் முக்கிய இலக்குகளில் ஒன்று என இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில்தான், லெபனானில் ஆயிரக்கணக்கான பேஜா்கள் வெடித்துச் சிதறியது பலரும் அறிந்ததே.