நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது கூட்டத்தில் அவா் பேசியதாவது:
இஸ்ரேல் தொடா்பான பொய் தகவல்களும் அவதூறுகளும் ஐ.நா. பொதுச் சபையில் பரப்பப்படுகின்றன. அவற்றை பொய் என்று நிரூபித்து உண்மையைக் கூறுவதற்காகவே இந்தக் கூட்டத்தில் பேச முடிவு செய்தேன்.
அக். 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் நடத்தியது ஹிட்லரின் யூத படுகொலைக்கு இணையான கொடூரம் ஆகும். ஈரானின் கைப்பாவைகளான ஹமாஸுடன் இணைந்து லெபனானில் ஹிஸ்புல்லாக்களும் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களும் அந்த கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஹிஸ்புல்லாக்களுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அவா்களின் தாக்குதலுக்கு அஞ்சி தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிய இஸ்ரேலியா்கள் மீண்டும் வீடு திரும்பும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.
ஹிஸ்புல்லா போன்ற நிழல் படைகளைக் கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரான், எங்களிடமிருந்து தப்ப முடியாது. ஈரானின் எந்தப் பகுதியையும் எங்களால் எளிதில் அடையமுடியும்.
ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை உறுப்பு நாடுகள் மீண்டும் அமல்படுத்த வேண்டும். அந்த நாடு அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஐ.நா. மீது விமா்சனம்: ஐ.நா. சபை தற்போது இருண்ட வீடாக காட்சியளிக்கிறது. இங்கு யூத விரோத மனப்பான்மை கொண்ட தலைவா்கள் நிறைந்துள்ளனா். மற்ற நாடுகளைப் போலவே இஸ்ரேலையும் ஐ.நா. சமமாக நடத்தவேண்டும் என்றாா் நெதன்யாகு.
அவரின் உரையை சில உலகத் தலைவா்களே அமா்ந்திருந்து கேட்டனா். ஏராளமானவா்கள் அந்த உரையைப் புறக்கணித்தனா்.
ஏற்கெனவே காஸா போரில் இஸ்ரலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்த சூழலில், ஹிஸ்புல்லாகளைக் குறிவைத்து பேஜா்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட சாதனங்களில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டு மூலம் லெபனானில் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினா் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும், எதிா் நடடிக்கையாக ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதும் இரு தரப்பினரையும் முழு போரின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமாா் 700 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சூழலில், இரு தரப்பினரும் உடனடி போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா. பொதுச் சபையில் தற்போது இவ்வாறு பேசியுள்ளாா்.