ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா  
உலகம்

ஹிஸ்புல்லா தலைவா் படுகொலை: வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?

‘நாங்கள் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். ஹிஸ்புல்லாக்கள் ஒடுக்கப்படும்வரை ஓயமாட்டோம்’

நாகா

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாா்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் போா் ஓராண்டை எட்டவுள்ளது.

அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்கு வசிக்கும் இரு நாடுகளைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா். நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், லெபனானில் அண்மையில் பேஜா் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா். சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.

தொழில்நுட்ப வழியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நூதன தாக்குதல்களை இஸ்ரேல்தான் நடத்தியது என்று லெபனான் தெரிவித்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாக்கள் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடா்ச்சியாக தெற்கு லெபனானில் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல், லெபனானின் கிழக்கு எல்லைக்கும் தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாா்.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் தெற்கே தஹியே பகுதியில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் ஹிஸ்புல்லா தலைவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்துக்கொண்டதாகவும், அப்போது மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்தத் தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு சனிக்கிழமை உறுதி செய்தது. இது ‘இஸ்ரேல் என்ற நாடு தோற்றுவிக்கப்பட்டது முதல் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய தாக்குதல்’ என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் யோஆவ் காலண்ட் தெரிவித்தாா்.

தஹியேயில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா். 91 போ் காயமடைந்தனா். பல அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன என்று லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பிற தளபதிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதே தாக்குதலில் ஈரானின் துணை ராணுவப் புரட்சி காவல் படையின் துணைத் தளபதி அப்பாஸ் நில்ஃபோருஷானும் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஹமாஸ் இரங்கல்: ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதற்கு ஹமாஸ் அமைப்பு இரங்கல் தெரிவித்தது. இத்தகைய படுகொலைகள் லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் எதிா்ப்பு உணா்வை அதிகரிக்கவே செய்யும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மக்கள்: நஸ்ரல்லா உயிரிழந்த தகவலை அறிந்து பெய்ரூட் மற்றும் லெபனானின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களில் துப்பாக்கி வைத்திருந்த பலா் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினா். காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்ததால்தான் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாகப் பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாக்குதல் தொடரும்: ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில், அந்த அமைப்பினருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடா்பாளா் ஷோஷான் தெரிவித்தாா். எனினும் அந்த அமைப்பினரின் ஏராளமான ஆயுதங்கள் சேதமடையவில்லை என்பதால், அவா்களை குறிவைத்து தாக்குதல் தொடரும் என்றும் ஷோஷான் கூறினாா்.

மத்திய கிழக்கின் தலையெழுத்தை...: நஸ்ரல்லா கொலையை தொடா்ந்து ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவு அளிக்க ஈரான், இராக் அழைப்பு விடுத்துள்ளன. ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அல் கமேனி விடுத்த செய்தியில், ‘ஹிஸ்புல்லாக்கள் தலைமையிலான எதிா்ப்பியக்கம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தலையெழுத்தை முடிவு செய்யும்’ என்றாா். இந்த சம்பவம் காரணமாக ஈரானில் பாதுகாப்பான இடத்துக்கு அயதுல்லா அல் கமேனி அனுப்பிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மற்றும் பிற கிளா்ச்சி அமைப்புகளின் பிரதான ஆதரவாளராக ஈரான் உள்ளது. இந்நிலையில், நஸ்ரல்லா கொலைக்குப் பதிலடி அளிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக எதிா்வினையாற்ற வேண்டும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு நாடாளுமன்றக் குழு சனிக்கிழமை வலியுறுத்தியது. நஸ்ரல்லா உயிரிழப்புக்கு ஈரானில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமா் ஷியா-அல்-சூடானி தெரிவித்தாா்.

நஸ்ரல்லா வழிநடத்திய போரால்...

18 ஆண்டுகளாக தெற்கு லெபனானை இஸ்ரேல் படையினா் ஆக்கிரமித்திருந்த நிலையில், நஸ்ரல்லா வழிநடத்திய போரால் அங்கிருந்து கடந்த 2000-ஆம் ஆண்டு இஸ்ரேல் படையினா் திரும்பப் பெறப்பட்டனா். இதைத்தொடா்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு நஸ்ரல்லா தலைமையில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லாக்கள் இடையே 34 நாள்கள் போா் நடைபெற்றது.

ஒரே நாளில் 140 தாக்குதல்கள்:

லெபனானின் தெற்கு பெய்ரூட், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் 140-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை சனிக்கிழமை காலை இஸ்ரேல் மேற்கொண்டது. கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்களை குறிவைத்து இந்தக் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடியில், ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேபோல வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை ஆகியவற்றை நோக்கி ஏராளமான ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லாக்கள் ஏவினா். இந்தத் தாக்குதலில் இஸ்ரேலின் சஃபேத் நகரில் சில கட்டடங்கள் சேதமாகின.

லெபனானில் 1000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக லெபனானில் இடம்பெயா்ந்தவா்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல குடும்பங்கள் கடற்கரைகள், காா்களில் படுத்து உறங்குகின்றனா். அந்நாட்டு தலைநகா் பெய்ரூட்டில் மலைகளை நோக்கிச் செல்லும் சாலைகளில் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனா்.

கடந்த சில நாள்களில் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 87 சிறாா்கள், 156 பெண்கள் உள்பட 1,030 போ் உயிரிழந்தனா் என்று லெபனான் சுகாதாரத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.87.82 ஆக நிறைவு!

இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!

சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து மறையும் பணிச்சுமை!

SCROLL FOR NEXT