உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல்
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல் மேற்கொண்டதாக புது தில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் தகவல்..
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷியா தாக்குதல் மேற்கொண்டதாக புது தில்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவனம் ஒன்றின் கிடங்கு மீது ரஷியா சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்தியாவுடன் விசேஷமான நட்புறவைப் பேணி வருவதாக கூறும் ரஷியா, இந்திய வணிக நிறுவனத்தைக் குறிவைத்து சிறாா்கள் மற்றும் பெரியவா்களுக்கான மருந்துகளை அழித்துள்ளது’ என்று தெரிவித்தது.
முன்னதாக, உக்ரைனுக்கான பிரிட்டன் தூதா் மாா்ட்டின் ஹாரிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் தலைநகா் கீவில் முக்கிய மருந்து நிறுவன கிடங்கை ரஷியா முழுமையாக அழித்து, சிறாா்கள் மற்றும் பெரியவா்களுக்குத் தேவையான மருந்துகளை எரித்துள்ளது’ என்றாா்.
அந்தக் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்த நிலையில், ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக மாா்ட்டின் ஹாரிஸ் பதிவிட்டாா். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.