வாடிகன் நகரம், உலகின் மிகக் சிறிய நாடாகக் கருதப்படும் நிலையில், கடந்த 96 ஆண்டுகளில், இங்கு ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கணக்கானோரின் வீடுகள் இந்த நகரில் இருக்கிறது. எனினும், இங்கு கடந்த நூறாண்டுகளில் ஒரு குழந்தைகூட பிறந்ததாகப் பதிவாகவில்லை. அதற்குக் காரணம், இந்த நகரில் ஒரு மருத்துவமனைகூட இல்லாததுதான் என்று தெரிய வந்துள்ளது.
உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் வாடிகன் நகரில், கிறிஸ்துவர்களின் புனித இடமான, ரோமன் கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ளது. இந்த நகரின் தேசிய எல்லைக்குள் ஒரு மருத்துவமனைகூட அமையப்பெறவில்லை.
அதாவது, 1929ஆம் ஆண்டுதான், சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு என்று வாடிகன் நகரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த நகரம் நாடு என அறிவிக்கப்பட்டபிறகு ஒரு குழந்தை கூட இங்கு பிறக்கவில்லையாம்.
இங்கு இதுவரை ஒரு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை என்பதும், இத்தாலியின் தலைநகர் ரோமுக்கு மத்தியில் அமைந்திருப்பதால், இந்த நகரில் யாருக்கேனும் சிகிச்சை தேவைப்படின் உடனடியாக அவர்கள் ரோம் நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதனால், இங்கு மருத்துவமனையின் தேவை இல்லாமல் போயிருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்த நகரின் பரப்பளவும் மிகச் சிறியது என்பதாலும், அருகில் உள்ள ரோம் நகரின் வளர்ச்சியும் இந்த முடிவுக்கு உறுதுணையாக அமைந்துவிட்டன.
இந்த நகரில் கிட்டத்தட்ட 900 பேர் வாழ்ந்து வரும் நிலையில், இங்குள்ள கர்ப்பிணிகள் ரோம் நகருக்குச் சென்றுதான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால், வாடிகன் நகரில் இதுவரை ஒரு குழந்தை கூட பிறந்ததில்லையாம்.
இங்கு வாழ்பவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் சில நூறுகளில் இருக்கலாம். ஆனால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இங்கு வந்து செல்வார்கள். மிகச் சிறிய நாடு என்பதோடு, உலகிலேயே மிகச் சிறிய ரயில்நிலையமான சிட்டா வாடிகானோ ரயில் நிலையம் இங்குதான் அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள ஒரே ரயில் நிலையம் இது ஒன்றுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.