ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பயங்கரவாதியை எதிர்த்துப் போராடிய குதிரை சவாரி செய்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்தில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்கச் சுற்றுலாப் பயணிகள் தத்தளித்தபோது, குதிரை சவாரி செய்யும் ஒருவர் பயங்கரவாதிகளிடையே சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினார்.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் குதிரை சவாரி தொழில் செய்துவந்தவர் சையத் அடில் ஹூசேன் ஷா. இவர் சம்பவத்தன்று துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனின் துப்பாக்கியைப் பறித்து, தாக்குதலை முறியடிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பயங்கரவாதியின் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஹூசேன் ஷாவின் வயதான பெற்றோர், மனைவி, குழந்தைகள் என அவரது குடும்பமே அவரது வருமானத்தை நம்பியே பிழைத்து வந்தனர். இந்தநிலையில் ஹூசேனின் மரணம் குடும்பத்தையே நிலை குலைய வைத்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலில் என் மகனை இழந்துவிட்டேன். மகனின் மரணம் குடும்பத்திற்கே பேரிழப்பாக மாறியுள்ளது என்று அவருடைய தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
மகனின் மரணம் குறித்து அவரது தந்தை சையத் ஹைதர் ஷா கூறுகையில்,
என் மகன் வழக்கம்போல் நேற்று மாலை 3 மணியளவில் பஹல்காமுக்கு வேலைக்காகச் சென்றிருந்தான். தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டு அவனைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவனின் தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மாலை 4.40 மணிக்கு அவனது தொலைபேசி இயக்கப்பட்டது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. உடனே நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். அப்போதுதான் தாக்குதலில் அவன் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.
குதிரை ஓட்டியின் மரணம் அந்த குடும்பத்தைப் பெருமளவில் பாதித்துள்ளதோடு, குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.