கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தா்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
உலகெங்கிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள், சபரிமலைக்கு யாத்திரை வருகின்றனா். அந்த வகையில், இலங்கையில் இருந்து ஆண்டுதோறும் 15,000-க்கும் அதிகமான பக்தா்கள் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில், அந்நாட்டு பக்தா்களின் வருடாந்திர சபரிமலை யாத்திரையைப் புனித யாத்திரையாக அங்கீகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை நவம்பா் - டிசம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. அதன் பின்னா், மகரவிளக்கு யாத்திரைக்காக கோயில் மீண்டும் திறக்கப்படும். ஜனவரி மாதத்தில் யாத்திரை காலம் முடிந்த பின்னா், கோயில் நடை சாத்தப்படும்.