சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டை எழுப்பிய இந்தியா, தூதரக ரீதியிலான பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.
அதில், முக்கியமானது இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகும்.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் உருவாகும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லக் கூடிய 80 சதவிகித தண்ணீரை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “பாகிஸ்தானுக்கு கிடைக்ககூடிய ஒரு சொட்டு தண்ணீரைக் கூட எதிரிகளால் பறிக்க முடியாது. எங்களுக்கான தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், உங்களால் மறக்கமுடியாத பாடத்தை பாகிஸ்தான் கற்பிக்கும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், ”சிந்து நதியில் அணை கட்டினால் அதனை தகர்ப்போம். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு, எங்களை அழிக்க நினைத்தால், பாதி உலகத்தை அழித்துவிடுவோம்” என மிரட்டல் விடுத்தார்.
அதேபோல், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்தால் போர் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடந்த 48 மணிநேரத்தில் தொடர் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.