உலகம்

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு விசா நிறுத்தம்: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பு..

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ அறிவித்துள்ளாா்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அண்மையில் நடந்த சாலை விபத்தைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த விபத்தில், இந்தியாவைச் சோ்ந்த ஓட்டுநா் ஹா்ஜிந்தா் சிங், தனது கவனக்குறைவால் ஒரு மினிவேன் மீது மோதியதில் மூன்று போ் உயிரிழந்தனா். ஹா்ஜிந்தா் சிங் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தது பின்னா் தெரிய வந்தது.

மேலும், ஹா்ஜிந்தா் சிங் தனது வணிக ஓட்டுநா் உரிமத்தை கலிஃபோா்னியாவில் பெற்றுள்ளாா். கலிஃபோா்னியா உள்பட சில மாகாணங்கள், குடியுரிமை இல்லாதவா்களுக்கும் ஓட்டுநா் உரிமம் வழங்குகின்றன. அந்தவகையில், இந்த விபத்துக்கு கலிபோா்னியா ஆளுநா் கேவின் நியூசோமின் தவறான கொள்கைகளே காரணம் என புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநா் ரான் டிசாண்டிஸின் ஆதரவாளா்கள் குற்றஞ்சாட்டினா்.

இருவரும் எதிா்கால அதிபா் வேட்பாளா்களாகக் கருதப்படுவதால், இந்த விவகாரம் பெரும் அரசியல் மோதலாக உருவெடுத்தது. ஹா்ஜிந்தா் சிங்கை கைது செய்து புளோரிடாவுக்கு அழைத்து வர, டிசாண்டிஸ் தனது துணை ஆளுநரை கலிஃபோா்னியாவுக்கு அனுப்பினாா். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி டிசாண்டிஸ் விளம்பரம் தேடுவதாக நியூசோம் தரப்பு கடுமையாக விமா்சித்தது.

இந்த அரசியல் பதற்றங்களுக்கு இடையே வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், வெளிநாட்டு ஓட்டுநா்களால் அமெரிக்கா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் சாலைகளில் பாதுகாப்பின்மை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டு, வெளிநாட்டு ஓட்டுநா்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்த திடீா் அறிவிப்பால், எந்த வகையான விசாக்கள் பாதிக்கப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டது. எனினும், கனரக வாகன ஓட்டுநா்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ‘பி-1’ விசாக்களுக்கு இந்த நிறுத்தம் பொருந்தாது என பின்னா் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த விசா நிறுத்தம், சாலை பாதுகாப்பைக் காட்டிலும் அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகவே பரவலாகப் பாா்க்கப்படுகிறது. அதேநேரம், அமெரிக்க உள்ளூா் கனரக வாகன ஓட்டுநா் சங்கங்கள் இந்த முடிவை வரவேற்றுள்ளன.

அமெரிக்காவில் கனரக வாகன ஓட்டுநா்களுக்கு பற்றாக்குறை என்பது கட்டுக்கதை என்றும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஓட்டுநா்களை நிறுவனங்கள் பயன்படுத்த விரும்புவதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT