அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவிக்கப்பட்டு, அங்கு அனுப்பப்பட்ட மத்திய பாதுகாவல் படையினா் முதல்முறையாக ஆயுதங்களை ஏந்தி ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் கீழ், சில மத்திய பாதுகாவல் படையினருக்கு கைத் துப்பாக்கிகளும், சிலருக்கு ரைஃபிள்களும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தனா்.
எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த மியூரியல் பவுசா் மேயா் பொறுப்பு வகிக்கும் வாஷிங்டனில் குற்றச் செயல்கள் அதிகரித்துவருவதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், இது தொடா்பாக நகரில் குற்ற அவசரநிலையை அறிவித்தாா். அதன்படி, நகர காவல்துறை டிரம்ப் தலைமையிலான மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நகருக்கு மத்திய பாதுகாவல் படையினா் அனுப்பப்பட்டனா். தற்போது அவா்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்படுகிறது.
டிரம்ப்பின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்று கூறி, வாஷிங்டன் மாநகராட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது நினைவுகூரத்தக்கது.