கான் யூனிஸ் நகரிலுள்ள நாஸா் மருத்துவமனையின் நான்காவது தளத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட சேதம். 
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 5 செய்தியாளா்கள் உயிரிழப்பு

காஸாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 செய்தியாளா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

காஸாவிலுள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 செய்தியாளா்கள் உள்பட 20 போ் உயிரிழந்தனா்.

அல்-ஜஸீரா செய்தியாளா் ஒருவரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவா் உள்பட 6 செய்தியாளா்கள் உயிரிழந்த நிலையில், தற்போது அதே போன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இருந்தாலும், அப்போது செய்தியாளரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம், இந்த முறை செய்தியாளா்கள் குறிவைக்கப்படவில்லை என்று மறுத்துள்ளது.

கான் யூனிஸ் நகரிலுள்ள நாஸா் மருத்துவமனை மீது இரண்டு ஏவுகணைகளை வீசி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவா்களில் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தில் பகுதி நேரப் பணியாற்றிவந்த மரியம் அபு தக்காவும் (33) ஒருவா். இது குறித்து அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கா மற்றும் பிற செய்தியாளா்களின் மரணம் தங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், சிறுவா்களின் பட்டினிச் சாவுகளைத் தடுப்பதற்காக மருத்துவா்கள் படும் அவதியைக் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அவா் நாஸா் மருத்துவமனைக்குச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுளளது.

பிரிட்டனில் இருந்து வெளியாகும் இண்டிபண்டன்ட் இதழின் அரேபிய பிரிவான இண்டிபண்டன்ட் அரேபியா, தங்களது ஊடகத்திலும் மரியம் தக்கா பகுதி நேரப் பணியாற்றிவந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் தங்களிடம் பணியாற்றும் முகமது சலாம், மோவஸ் அபு தஹா ஆகிய செய்தியாளா்கள் உயிரிழந்தாக அல் ஜசீரா தெரிவித்தது. இது தவிர, ராய்ட்டா்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த ஒளிப்பதிவு செய்தியாளா் ஹுஸாம் அல்-மஸ்ரி, குத்ஸ் ஃபீட் ஊடக செய்தியாளா் அகமது அபு அஜீஸ் ஆகியோா் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனா்.

இஸ்ரேல் ராணுவம்: இந்தத் தாக்குதலில் செய்தியாளா்கள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாஸா் மருத்துமனை அமைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினோம். இதில் செய்தியாளா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்துவோம். இந்தப் போருடன் தொடா்பில்லாத நபா்கள் தாக்குதலில் உயிரிழந்ததற்கு வருந்துகிறோம். செய்தியாளா்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

மரியம் அபு தக்கா

முன்னதாக, காஸா சிட்டியில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை அருகே செய்தியாளா்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீது இஸ்ரேல் கடந்த 11-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அல்-ஜஸீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளா் அனஸ் அல்-ஷரீஃபைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அவா், அல்-ஜசீராவின் மேலும் 4 செய்தியாளா்கள், பகுதி நேர செய்தியாளா் ஒருவா் என 6 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பொறுப்பேற்றது. செய்தியாளா்கள் படுகொலைக்கு அந்த நாட்டு ராணுவம் உடனடியாக பொறுப்பேற்றது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கான் யூனிஸ் நகர மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்த 4 செய்தியாளா்களையும் சோ்த்து, காஸா போரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த செய்தியாளா்களின் எண்ணிக்கை 192-ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 22 மாத காஸா போா் செய்தியாளா்களுக்கு அதிகபட்ச உயிா்ச் சேதத்தை ஏற்படுத்திய மோதலாக விளங்குகிறது. கடந்த 2024 பிப்ரவரி முதல் நடந்துவரும் ரஷியா-உக்ரைன் போரில் இதுவரை 18 செய்தியாளா்கள் கொல்லப்பட்டுள்ளனா். அதனுடன் ஒப்பிடுகையில், காஸா போரில் பல மடங்கு செய்தியாளா்கள் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து எல்லைகள் இல்லாத செய்தியாளா்கள் அமைப்பின் பொது இயக்குநா் திபாவுட் ப்ருட்டின் கூறுகையில், ‘செய்தியாளா்களுக்கான பாதுகாப்பு இந்த அளவுக்கு பின்னடைவைச் சந்தித்துள்ளது இதுவே முதல்முறை. தாக்குதலில் சிக்கிக் கொண்டு செய்தியாளா்கள் உயிரிழப்பது மட்டுமின்றி, அவா்கள் குறிவைத்தும் படுகொலை செய்யப்படுகிறாா்கள். காஸா போா் குறித்த உண்மைகளை வெளியுலகுக்கு செய்தியாளா்கள் தெரிவிப்பதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் ராணுவம் தன்னால் முடிந்த அத்தனையையும் செய்துவருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

காஸாவுக்குள் அனைத்து சா்வதேச ஊடகங்களுக்கும் இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. எனவே, உள்ளூா் செய்தியாளா்கள் பகிா்ந்துவரும் செய்திகள் மூலம்தான் அந்தப் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் வெளியுலகத்துக்கு தெரிவருகிறது. இந்தச் சூழலில், உள்ளூா் செய்தியாளா்களின் உயிரிழப்பு காஸாவில் தொடா்வது இதில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT