ஜப்பானில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைக் கைதி ஒருவரின் கல்லறையில் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
டோக்கியோவுக்கு அருகில் அமைந்துள்ள யோகோஹாமா நகரத்தில் உள்ள இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 3 நிர்வாகிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உபகரணங்களை ஏற்றுமதி செய்ததாகத் தவறுதலாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூன்று நிர்வாகிகளில் ஒருவரான ஷிசுவோ ஐஷிமா (வயது 72), புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட பிணை வேண்டி 8 முறை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுக்கல் நிராகரிக்கப்பட்டன.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பாக, கடந்த 2021 பிப்ரவரியில் அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், மிகவும் தாமதமாக அளிக்கப்பட்ட சிகிச்சையால் எந்தவொரு பலனுமின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், ஜப்பானின் காவல் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் ஐஷிமாவின் கல்லறையில் மலர் தூவி, தலை வணங்கி அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளனர்.
இதுகுறித்து, டோக்கியோ காவல் துறையின் உயர் அதிகாரி, எங்களது சட்டவிரோதமான விசாரணை மற்றும் கைதுகளுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் எனக் கூறியுள்ளார்.
மேலும், டோக்கியோ மாவட்ட துணை அரசு வழக்கறிஞரான ஹிரோஷி இச்சிகாவா, ஐஷிமாவுக்கு பிணை நிராகரிக்கப்பட்டது அந்நியாயம் என ஒப்புக்கொண்டதுடன், அதற்காக தனது வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டுகளை அவர்களது நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்தது.
பின்னர், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தவறுதலாகக் கைது செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு டோக்கியோ அரசு ரூ.9.4 கோடி இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.