நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கோரிய என்சிஇஆர்டி!
சர்ச்சைக்குள்ளான பாடப் புத்தகம் தொர்பாக மன்னிப்புக் கோரிய என்சிஇஆர்டி.
8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பில் நீதித்துறை பற்றிய ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்த நிலையில் என்சிஇஆர்டி நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) புதிதாக அச்சடிக்கப்பட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பில் நீதித்துறை பற்றிய ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றதாகத் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கடந்த பிப். 26 அன்று தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
Advertisement
Advertisement
அப்போது, அப்பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இது நீதித்துறைக்கு எதிரான சதி என்றும், திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இவ்விவகாரத்தை நீதித்துறை கவனத்துக்கு எடுத்துச்சென்ற ஊடகத்துறைக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தனது நன்றியைப் பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சமூக அறிவியல் புத்தகத்தை மேற்கொண்டு பதிப்பதற்கோ வெளியிடுவதற்கோ தடை விதித்து தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. மேலும், அதிலுள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை பொதுவெளியில் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க என்சிஇஆர்டி இயக்குநருக்கும் பள்ளிக்கல்வித் துறை செயலருக்கும் நோட்டீஸும் அனுப்பபட்டிருந்த நிலையில், இன்று என்சிஇஆர்டி நிர்வாக இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், ” நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கோருகிறோம். அந்தப் புத்தகம் திரும்பப் பெறப்படும். இனி விற்பனைக்குக் கிடைக்காது” என்றும் தெரிவித்துள்ளனர்.
NCERT has apologized for the controversy surrounding a lesson in its Class 8 social science textbook titled ‘Corruption in the Judiciary’.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.