காஸாவிலும் மேற்குக் கரையிலும் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் நான்கு பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது, ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் காஸா நிறுத்தத்தை சீா்குலைக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸா: தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு செய்தியாளா் கொல்லப்பட்டாா். அதேநாள், காஸாவின் மையப் பகுதியில் உள்ள புரெய்ஜ் அகதிகள் குடியிருப்புப் பகுதியில் ஒரு பாலஸ்தீனா் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
காஸாவில் கடந்த 2023-இல் போா் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 225-க்கும் மேற்பட்ட செய்தியாளா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த கடந்த அக்டோபா் 11-ஆம் தேதியில் இருந்து இதுவரை 350-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகரம் கூறியது.
மேற்குக் கரை: மேற்குக் கரையின் மையப் பகுதியில் உள்ள ஆத்ரெட் இஸ்ரேல் குடியிருப்பு அருகில், இரு இஸ்ரேல் வீரா்களை கத்தியால் குத்தியதாக ஒரு பாலஸ்தீனரை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்றனா். அத்துடன், மேற்குக் கரையின் தென் பகுதியிலுள்ள ஹெப்ரோன் நகருக்கு அருகே, பெண் ராணுவ வீரா் மீது வாகனத்தை மோதி காயப்படுத்திய பாலஸ்தீனரை இஸ்ரேல் படையினா் சுட்டுக் கொன்றனா். அவரை கைது செய்ய முயன்றபோது போது தப்ப முயன்று, வீரா்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியதால் சுட்டுக் கொன்ாக ராணுவம் கூறியது.