உக்ரைன் உடனான போரை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நிறுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் நான்காவது ஆண்டை எட்டவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்துள்ளார்.
போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக 28 அம்ச வரைவு அறிக்கையையும் அதிபர் டிரம்ப் வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கை ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் திருத்தங்கள் முன்மொழிந்துள்ளன.
இந்த நிலையில், மாஸ்கோவில் ரஷிய அதிபரை சந்தித்த வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் 5 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் பேசியதாவது:
”புதினுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சிறப்பான சந்திப்பை நடத்தினார்கள். சந்திப்பில் பேசப்பட்டது தொடர்பாக தற்போது என்னால் சொல்ல முடியாது. புதின் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்.” எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, ரஷிய அதிபர் மாளிகையின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ் பேசுகையில், “போர் தொடங்கிய பிறகு, வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையே நடைபெற்ற மிக விரிவான பேச்சுவார்த்தை இதுவாகும். இரவுவரை விவாதம் செய்யப்பட்டன. ஆனால், பிராந்திய பிரச்னைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இரு தரப்பினரும் தீர்வுக்கான சாத்தியமான வழிகளை மதிப்பாய்வு செய்தோம். ஆனால், போரை நிறுத்த செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.