இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகாரத்தை அரசு ஊக்குவிப்பதாக பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அப்துல் சமாத் யாகூப் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானில் பாதுகாப்பு முப்படைகளின் தலைவர் (சிடிஎஃப்) பதவி வகிக்கும் ஜெனரல் சையத் ஆசிம் முனீரின் பதவிக் காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளது அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ). பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் நிறுவனத் தலைவருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், இதே கருத்தை பிரதிபலித்திருக்கும் அப்துல் சமாத் யாகூப், பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையானது, ‘ஜனநாயக முறையற்றது எனவும், அரசமைப்புக்கு எதிரானது என்றும், சர்வாதிகாரப் போக்கு எனவும்’ குறிப்பிட்டு அவர் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது,“சிடிஎஃப் என்றதொரு பதவி உருவாக்கப்பட்டிருப்பதே அரசமைப்பின் வரம்பை மீறிய செயலாகவே கருதுகிறோம். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் பிடிஐ முறையிட திட்டமிட்டிருக்கிறது.
நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரிலான அரசின் இந்த நடவடிக்கையானது, பெரும் அதிகாரத்தை ஒரு தனி மனிதனின் கைகளில் குவிக்கச் செய்கிறது. சர்வ அதிகாரத்தையும் ஜெனரல் ஆசிம் முனீருக்கு வழங்கியிருப்பதன்மூலம், இந்த அரசு அரசமைப்பை பலவீனமாக்கி ராணுவ சர்வாதிகாரத்தை உருவாக்கியிருக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.