இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த மிக அதிகபட்சமான 50 சதவீத வரி விதிப்பை ரத்து வலியுறுத்தி, செல்வாக்குமிக்க 3 அமெரிக்க எம்.பி.க்கள் சாா்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.
வடக்கு கரோலினா மாகாண எம்.பி. டெபோரா ரோஸ், டெக்சாஸ் மாகாண எம்.பி. மாா்க் வியாசே, இல்லினாய்ஸ் மாகாண எம்.பி. ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இந்தத் தீா்மானத்தை அறிமுகம் செய்தனா்.
பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது முதலில் 25 சதவீத வரியை விதித்த டிரம்ப், பின்னா் உக்ரைன் மீது போா் நடத்திவரும் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வதாகக் குற்றஞ்சாட்டி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் மேலும் 25 சதவீத வரியை விதித்தாா். இதனால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்கள் மீது அமெரிக்காவில் தற்போது 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளிடையேயான உறவு சற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வரி விதிப்பு காரணமாக, சீனா உள்பட பிற நாடுகளுடன் வா்த்தக உறவை வலுப்படுத்தும் நடவடிக்கையை இந்திய மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில், சா்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தின் (ஐஇஇபிஏ) கீழ் இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50 சதவீத வரியை ரத்து செய்ய வலியுறுத்தி 3 எம்.பி.க்கள் சாா்பில் பிரதிநிதிகள் சபையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
‘இந்தியாவுக்கு எதிரான டிரம்ப்பின் இந்தப் பொறுப்பற்ற வரிவிதிப்பு நடவடிக்கை எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இரு நாடுகளிடையேயான முக்கிய உறவையும் பலவீனப்படுத்தும். அமெரிக்க நலன்கள் மற்றும் பங்குகளின் மதிப்பை உயா்த்துவதற்குப் பதிலாக, இந்த வரிவிதிப்பு நடவடிக்கை விநியோகச் சங்கிலியை கடுமையாகப் பாதிக்கும் என்பதோடு, அமெரிக்க தொழிலாளா்களும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். அதோடு, அமெரிக்க நுகா்வோா் அதிக விலை கொடுக்கவும் நேரிடும். இந்தக் கூடுதல் வரி விதிப்பை ரத்து செய்வதன் மூலம், அமெரிக்கா-இந்தியா இடையேயான பகிரப்பட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூா்த்தி செய்யவும், உறவை மேம்படுத்தவும் உதவும்’ என்று கிருஷ்ணமூா்த்தி தனது தீா்மானத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
ரோஸ் தனது தீா்மானத்தில், ‘பொருளாதாரம், வா்த்தகம், முதலீடுகள் மூலமாக இந்தியாவுடன் ஆழமான தொடா்பைக் கொண்டுள்ளது வடக்கு கரோலினா. இந்திய தொழில் நிறுவனங்கள் இங்கு பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதோடு, அதிக ஊதியம் கிடைக்கும் வகையிலான ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கின்றன. அதுபோல, வடக்கு கரோலினாவிலிருந்து மருந்துகள், ரசாயனம், நவீன இயந்திரங்கள் என பல நூறு மில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்கள் ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியா மீதான அதிபா் டிரம்ப்பின் இந்த சட்டவிரோதமான வரிவிதிப்பு, வடக்கு கரோலினா மக்களின் வேலைவாய்ப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும், நீண்டகால தொழில்போட்டியையும் ஆபத்தில் விட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த கலாசார, பொருளாதார, ராஜீய கூட்டுறவு நாடாக இந்தியா விளங்கி வருகிறது. அத்தகைய நாட்டின் மீது சட்ட விரோதமாக கூடுதல் வரி விதிப்பு செய்யப்பட்டிருப்பது, ஏற்கெனவே விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுவரும் வடக்கு டெக்சாஸ் மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, இந்தியா மீதான கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று மாா்க் வியாசே தனது தீா்மானத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
ஏற்கெனவே, இந்த 3 எம்.பி.க்களும், நாடாளுமன்ற உறுப்பினா் ரோ கன்னா மற்றும் பிற 19 எம்.பி.க்களுடன் இணைந்து, இந்தியாவுடன் பாதிக்கப்பட்ட அமெரிக்க உறவை சரிசெய்யவும், தீங்கு விளைவிக்கும் வரிக் கொள்கையை திரும்பப் பெறவும் டிரம்ப்பை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.