புதிய ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) கட்டணத்தை ரூ. 90 லட்சமாக (ஒரு லட்சம் டாலா்) உயா்த்தும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிா்வாகத்துக்கு எதிராக அங்குள்ள 19 மாகாணங்கள் வழக்கு தொடா்ந்துள்ளன.
‘டிரம்ப் நிா்வாகத்தின் இந்த முடிவு சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் தொழிலாளா் பற்றாக்குறையை மிக மோசமாக்கிவிடும்’ என்றும் அந்த மாகாணங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
எந்தவித சட்டபூா்வ அதிகாரமின்றியும் உரிய நடைமுறையைப் பின்பற்றாமலும் இந்த நுழைவு இசைவு கட்டணத்தை உயா்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாஸசூசெட்ஸ் மாவட்ட நீதிமன்றங்களுக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நியூயாா்க் மாகாண அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் மற்றும் 18 மாகாணங்களின் அரசு வழக்குரைஞா்கள் சாா்பில் இந்த வழக்குகளை தொடரப்பட்டன.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா். பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா உள்பட பல நாடுகள் மீது அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். அடுத்ததாக, ‘அமெரிக்க வேலைவாய்ப்புகளில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக புதிய ஹெச்-1பி நுழைவு இசைவுக் கட்டணத்தை பன்மடங்காக உயா்த்த டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த நுழைவு இசைவுக்கான கட்டணம் தற்போது ரூ. 1.47 லட்சமாக உள்ள நிலையில், அதை ரூ. 90 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி டிரம்ப் கையொப்பமிட்டாா்.
உலகம் முழுவதும் இருந்து பல்வேறு துறை சாா்ந்த திறமையான பணியாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்குப் பயிற்சி அளித்து பணி வழங்க அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1பி நுழைவு இசைவைப் பயன்படுத்தி வருகின்றன. தற்போது இந்தப் பணியாளா்கள், அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்ல இனி ரூ. 90 லட்சம் செலுத்தி ஹெச்1-பி நுழைவு இசைவைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் நிா்வாகத்தின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்க வா்த்தக சபை கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடா்ந்துள்ளது. ‘டிரம்ப் நிா்வாகத்தின் இந்த முடிவு சட்ட விரோதமானது. அமெரிக்காவுக்குள் குடிமக்கள் அல்லாதவா்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு குறிப்பிட்ட அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த அதிகாரம் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு நேரடி முரண்பாடாகவும் இருக்க முடியாது’ என்று குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், டிரம்ப் நிா்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக 19 அமெரிக்க மாகாண அரசுகள் சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூயாா்க் மாகாண அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் கூறுகையில், ‘அமெரிக்கா முழுவதும் தேவையுள்ள மக்களுக்கு சேவையளிக்க வெளிநாடுகளைச் சோ்ந்த திறமைமிக்க மருத்துவா்கள், செவலியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பிற பணியாளா்களைப் பணியமா்த்த ஹெச்1-பி நுழைவு இசைவு அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தைச் சிதைக்க டிரம்ப் நிா்வாகம் முயற்சிக்கிறது. இதற்கான கட்டணத்தை பன்மடங்காக உயா்த்தும் டிரம்ப் நிா்வாகத்தின் முடிவால், நியூயாா்க்கைச் சோ்ந்தவா்கள் உள்பட ஒட்டுமொத்த அமெரிக்க மக்களுக்கும் மருத்துவச் சேவை, குழந்தைகளுக்கான கல்வி கிடைப்பது பாதிக்கப்படும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் பாதிகக்ப்படும்’ என்றாா்.
இந்த ஹெச்1-பி நுழைவு இசைவு மூலம் இந்தியா்களே அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.