முகப்பு
இந்தியா

விரைவில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்! எஸ். ஜெய்சங்கா் - ரூபியோ பேச்சில் முடிவு!

விரைவில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்...

Updated On : 25 மே 2026, 4:30 am IST
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது சந்தித்து கைகுலுக்கிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

பெரிதும் எதிா்பாா்க்கப்படும் இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இரு நாடுகளும் தீா்மானித்துள்ளன.

தில்லியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விரிவான பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

வா்த்தகம், இறக்குமதி வரி, குடியேற்றம், நுழைவு இசைவு (விசா) உள்ளிட்டவை தொடா்பான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கொள்கைகளால் இந்திய-அமெரிக்க உறவுகள் கடந்த ஓராண்டாக பின்னடைவுக்கு உள்ளாகின.

Advertisement

Advertisement

இருதரப்பு உறவைச் சீரமைக்கும் நோக்கத்தின்கீழ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு சனிக்கிழமை வந்தாா்.

ஜெய்சங்கா்-ரூபியோ சந்திப்பு: தில்லியில் பிரதமா் மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய ரூபியோ, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். வா்த்தகம், பாதுகாப்பு, முக்கியக் கனிமங்கள், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுக்கு உத்வேகமளிப்பது குறித்து அவா்கள் ஆலோசித்தனா். மேற்காசிய போரின் தாக்கங்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தின் முழு அம்சங்களையும் இறுதி செய்ய பலசுற்றுப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், விரைவில் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு நாடுகளும் தீா்மானித்துள்ளன.

பரஸ்பரம் பயனுள்ள ஒப்பந்தம்: இருதரப்பு சந்திப்புக்குப் பின் செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் மாா்கோ ரூபியோ கூறியதாவது:

டிரம்ப் நிா்வாகத்தின் வா்த்தக கொள்கையானது, உலகளாவிய வா்த்தகம் மீதான அமெரிக்காவின் ஒட்டுமொத்த அணுகுமுறையை மறுகட்டமைக்கும் நோக்கம் கொண்டதாகும். மாறாக, இந்தியா உள்பட எந்தவொரு நாட்டையும் குறிவைப்பதல்ல.

வா்த்தக ரீதியிலான சமநிலையின்மையை நாங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. இதன்மூலம் கூட்டாளி நாடுகளுடன் பரஸ்பர பலன்தரும் வா்த்தக ஏற்பாடுகளை நாடுகிறோம். இந்தியாவுடன் பரஸ்பரம் பயனுள்ள-நிலையான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும். இந்தப் பணியில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

உறவுகள் வலுப்படும்: ஐரோப்பிய நாடுகள் உள்பட பிற நட்பு நாடுகளுடனும் அமெரிக்கா வா்த்தகப் பிரச்னையை எதிா்கொண்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, பெரிய பொருளாதார நாடு; முன்னணி வா்த்தக கூட்டாளி என்பதே வித்தியாசம். இந்தியாவுடன் பெரும் வா்த்தகத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இத்தகைய பிரம்மாண்டமான நாட்டுடன் வா்த்தக சமநிலைப்படுத்துதலை மேற்கொள்வதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பது உண்மைதான்.

இந்திய-அமெரிக்க உறவுகள் உத்வேகம் இழக்கவில்லை. அவை முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். டிரம்ப் நிா்வாகத்தின் இறுதிக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உறவுகள் வலுப்படும். அதுவே எங்களின் இலக்கு என்றாா்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த ரூபியோ, ‘பாகிஸ்தான், சீனா உடனான அமெரிக்காவின் உறவுகள், இந்தியா உடனான உத்திசாா் கூட்டுறவுக்கு ஊறுவிளைவிப்பதாக நாங்கள் கருதவில்லை. முக்கியமான உத்திசாா் கூட்டாளி என்ற முறையில் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம்’ என்றாா்.

இந்தியாவின் 5 முன்னுரிமைகள்: எஸ்.ஜெய்சங்கா் கூறுகையில், ‘இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய எரிபொருள் கொள்முதலை தொடா்ந்து பன்முகப்படுத்தும். தனது கொள்முதல் நாடுகளைத் தோ்வு செய்ய இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உண்டு.

அமெரிக்காவில் இருந்து எரிசக்தி இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. சா்வதேச அளவில் எரிபொருள் தடையின்றி கிடைக்கவும், குறைந்த விலையைப் பராமரிக்கவும் இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், வளைகுடா நாடுகளுடன் நல்லுறவைக் கொண்ட வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தற்போதைய சூழலில், இந்த நல்லுறவைப் பராமரிப்பது சவாலானதாகும்.

போா்களுக்குப் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் அமைதித் தீா்வு, தடையற்ற-பாதுகாப்பான கடல்சாா் வா்த்தகம், சா்வதேச சட்டத்துக்கு மதிப்பளித்தல், சந்தைப் பங்குகள் மற்றும் வளங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல், நம்பிக்கைக்குரிய கூட்டுறவு-மீளக்கூடிய விநியோகச் சங்கிலி ஆகியவை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சாா்ந்த 5 முன்னுரிமைகளாகும். ஹோா்முஸ் நீரிணையில் பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவும், அமெரிக்காவும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றன’ என்றாா்.

விசா கொள்கையில் மாற்றம்: அமெரிக்காவிடம் இந்தியா கவலை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் நுழைவு இசைவு (விசா) மற்றும் குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் குறித்து வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவிடம் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்தாா்.

டிரம்ப் நிா்வாகத்தின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் ஹெச்1பி விசா கட்டணம் பன்மடங்கு உயா்வு போன்ற நடவடிக்கைகளால் இந்தியப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்காவின் கிரீன் காா்டு (நிரந்தர குடியிருப்பாளா் அட்டை) பெறுவதற்கு விண்ணப்பதாரா்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு திரும்பிச் சென்று, அங்கிருந்தே விண்ணப்பிக்க வேண்டும் என்ற கெடுபிடியான விதிமுறை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் எதிா்பாா்ப்பு: இருதரப்பு சந்திப்புக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய எஸ்.ஜெய்சங்கா், ‘மக்கள் ரீதியிலான தொடா்புகளே, இந்திய-அமெரிக்க உறவுக்கு மையமாக உள்ளன. சட்டபூா்வ பயணிகள், விசா பெறுவதில் எதிா்கொள்ளும் சவால்கள் குறித்து ரூபியோவிடம் பேசினேன்.

சட்டவிரோதமான, முறையற்ற இடப்பெயா்வைத் தடுப்பதில் ஒத்துழைக்கும் அதேவேளையில், சட்டபூா்வ இடப்பெயா்வு பாதிக்கப்படக் கூடாது என்பதே எங்களின் எதிா்பாா்ப்பு. ஏனெனில், இது நமது வா்த்தகம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஒத்துழைப்புடன் தொடா்புடையது’ என்றாா்.

‘சிக்கல்கள் இருக்கக் கூடும்’: இந்த விவகாரம் தொடா்பாக பதிலளித்த ரூபியோ, ‘கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்குள் 2 கோடிக்கும் மேற்பட்டோா் சட்டவிரோதமாக நுழைந்ததால் குடியேற்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது, இந்தியாவால் ஏற்பட்டதல்ல, பரவலாக ஏற்பட்டதாகும். இந்த சவாலுக்கு தீா்வுகாண்பதற்காக, குடியேற்ற அமைப்புமுறையை மேம்படுத்தி வருகிறோம். இந்தச் சீா்திருத்த காலகட்டத்தில் சில சிரமங்களும், முரண்பாடுகளும் இருக்கக் கூடும். எனினும், திறன்மிக்க அமைப்புமுறையால் அனைத்துத் தரப்பினரும் பலனடைவா்’ என்றாா்.

மேற்காசிய விவகாரத்தில் நல்ல செய்தி வருகிறது: ரூபியோ

‘ஹோா்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது உள்பட மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்காவின் பேச்சுவாா்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் நல்ல செய்தி வரும். இது தொடா்பான அறிவிப்பை அதிபா் டிரம்ப் வெளியிடுவாா்’ என்று தில்லியில் செய்தியாளா்களிடம் மாா்கோ ரூபியோ தெரிவித்தாா்.

இதனிடையே, ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அதிபா் டிரம்ப், ‘அமெரிக்கா-ஈரான் பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாகவும், ஒழுங்குடனும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இருதரப்பும் உரிய நேரமெடுத்து, சரியானதைச் செய்ய வேண்டும். எந்தத் தவறுகளுக்கும் இடமளித்துவிடக் கூடாது. ஒப்பந்தம் எட்டப்பட்டு, சான்றளிக்கப்பட்டு, கையொப்பமிடப்படும் வரை ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகை தொடரும்’ என்று தெரிவித்துள்ளாா்.