வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவிடம் இருந்து திருடப்பட்ட எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட சொத்துகள் திருப்பி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், வெனிசுலா முழுவதுமாக மிகப்பெரிய அமெரிக்க கடற்படையால் சூழப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத அகதிகள் கடத்தலுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
சமீபத்தில் வெனிசுலாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வெனிசுலாவைச் சுற்றிவளைத்து அமெரிக்க கடற்படையினர் சூழ்ந்துள்ளதாக இன்று காலை டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய கடற்படையால் வெனிசுலா முழுவதுமாகச் சூழப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும். வெனிசுலாவுக்கு கொடுக்கப் போகும் அதிர்ச்சி, அவர்கள் இதற்கு முன் கண்டிராத ஒன்றாக இருக்கும். அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திருடிய அனைத்து எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை திருப்பித் தரும் வரை இந்த நிலை தொடரும்.
சட்டவிரோதமான மடூரோ ஆட்சி, திருடப்பட்ட இந்த எண்ணெய் வயல்களில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் பயன்படுத்தி தங்களுக்குத் தாங்களே நிதியளித்துக்கொள்வதுடன், போதைப்பொருள் பயங்கரவாதம், மனிதக் கடத்தல், கொலை மற்றும் ஆள்கடத்தல் போன்ற செயல்களுக்கும் நிதியளிக்கிறது. இதன்காரணமாக வெனிசுலா ஆட்சி ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெனிசுலாவுக்கு உள்ளேயும், வெளியேவும் செல்லும் தடைசெய்யப்பட்ட அனைத்து எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் முற்றுகையிட இன்று உத்தரவிட்டுள்ளேன். பலவீனமான மற்றும் திறமையற்ற பைடன் நிர்வாகத்தின் போது மடூரோ ஆட்சி, அமெரிக்காவுக்கு அனுப்பிய சட்டவிரோத குடியேறிகளும் குற்றவாளிகளும் அதிவேகமாக வெனிசுலாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.