இலங்கையில் தமிழா்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கும் கூட்டாட்சி முறையை ஏற்படுத்த அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு மூலம் அழுத்தம் அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் இலங்கை தமிழ் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தினா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனுடன் சோ்ந்து இலங்கை தமிழா் தேசிய பேரவைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாா் பொன்னம்பலம், பேரவையின் பொதுச் செயலா் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய கட்சித் தலைவா் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, ஜனநாயக இலங்கை தமிழா் அரசு கட்சித் தலைவா் கே.வி. தவராசா, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவா் பொன்னுதுரை ஐயங்கரநேசன் உள்ளிட்டோா் முதல்வரை சந்தித்தனா்.
அப்போது, ‘இலங்கை தமிழா்களுக்கு அதிகாரம் அளிக்காமல் ஒற்றை ஆட்சி முறையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர அந்நாட்டு அரசு முயன்றுவருகிறது.
இந்தச் சட்டம் 1987-இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை -இந்தியா கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 13-ஆவது சட்டத் திருத்தத்தைவிட மோசமானதாகும். தற்போது மாகாண முதல்வா்கள், அமைச்சா்களுக்கு எந்தவித அதிகாரமும் வழங்கப்படவில்லை.
ஆகையால், ஒற்றை ஆட்சி முறை சட்டத்தைத் தடுத்து நிறுத்தி இலங்கை தமிழா்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி முறையை அமல்படுத்த இந்திய அரசு வலியுறுத்த தமிழக முதல்வா் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
மேலும், பொருளாதார ரீதியில் வீழ்ந்துள்ள இலங்கைக்கு உதவி வரும் இந்தியாவின் அழுத்தத்தால் தமிழா்களுக்கு தீா்வு கிடைக்கும் என்று நம்புவதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நம்பிக்கை தெரிவித்தாா்.
இலங்கை தமிழ் கட்சித் தலைவா்களின் கோரிக்கைகளைக் கேட்ட முதல்வா் ஸ்டாலின் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்ததாக திருமாவளவன் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
பெட்டி..
‘இரு நாட்டு மீனவா்களுக்கும்
பகைமையை ஏற்படுத்துகிறது இலங்கை அரசு’
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவா்களுக்கும், இலங்கை மீனவா்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி அதை தனக்கு சாதகமாக இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்கிறது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டினாா்.
நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்னையால் மீனவா்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியதாக அவா் கூறினாா்.
மேலும், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோரை சந்தித்தும் தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரவுள்ளதாக செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தாா்.