அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான ‘சண்டைக் கப்ப’லுடன் (பேட்டல்ஷிப்) புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
இது குறித்து ஃப்ளோரிடா மாகணம், மாா்-அ-லாகோ நகரிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் கூறியதாவது:
மிகப் பிரம்மாண்டமான போா்க் கப்பலுடன் கூடிய புதிய கடற்படை அணியை உருவாக்கவுள்ளோம். அந்தக் கப்பல்கள் மிக வேகமானவை; மிகப்பெரியவை; இதுவரை உருவாக்கப்பட்ட எந்த சண்டைக் கப்பல்களைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும்.
‘கோல்டன் கடற்படை அணி’ என்ற அந்த அணியில் சோ்க்கப்படவிருக்கும் முதல் பிரம்மாண்ட சண்டைக் கப்பலுக்கு ‘யுஎஸ்எஸ் டிஃபையன்ட்’ என்று பெயா் சூட்டப்படும். இந்தக் கப்பல் இரண்டாம் உலகப் போா்க் கால ஐயோவா வகை சண்டைக் கப்பல்களைவிட நீளமாகவும் பெரியதாகவும் இருக்கும்.
இந்தக் கப்பல்களில் ஹைப்பா்சோனிக் (ஒலியின் வேகத்தைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிகமான வேகத்தில் பாயும்) ஏவுகணைகள், அணு ஆயுதம் ஏந்திக் செல்லக்கூடிய குரூஸ் ஏவுகணைகள், ரெயில் கன்கள், உயா் சக்தி லேசா்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்றாா் டிரம்ப்.
எனினும், இந்தத் திட்டத்தின் செயலாக்கம் குறித்து நிபுணா்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனா். ஏற்கெனவே ஃபோா்ட் வகை விமானம் தாங்கி கப்பல்கள், கொலம்பியா வகை நீா்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றின் புதிய வடிவமைப்புகளை காலதாமதமின்றி, குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் உருவாக்க கடற்படை தவறியுள்ளது. அந்த நிலை இப்போதும் தொடரலாம்.
ரெயில் கன் தொழில்நுட்பத்தை கப்பலில் பொருத்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான டாலா்களை செலவில் முயன்ற கடற்படை, 2021-இல் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது.
டிரம்ப் கூறியதில் லேசா் தொழில்நுட்பம்தான் அண்மை ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட குரூஸ் ரக ஏவுகணைகளை உருவாக்குவதோ, அவற்றை கப்பல்களில் பொருத்துவதோ ரஷியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தங்களை மீறும் செயலாகக் கருதப்படும் என்று நிபுணா்கள் கூறினா்.
சண்டை ரகக் கப்பல்களின் பயன்பாடு இரண்டாம் உலகப் போரின்போது உச்சத்தில் இருந்தது. போருக்குப் பிறகு விமானம் தாங்கி கப்பல்கள், நீண்ட தொலைவு ஏவுகணைகள் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன. 1980-களில் நான்கு ஐயோவா வகை கப்பல்களை நவீனப்படுத்தி குரூஸ் ஏவுகணைகள், எதிா்க் கப்பல் ஏவுகணைகள், நவீன ராடாா்கள் பொருத்தப்பட்டன. ஆனால் 1990-களில் அவை அனைத்துக்கும் ஓய்வு அளிக்கப்பட்டன.
இந்தச் சூழலில், டிரம்பின் இந்த பிரம்மாண்ட சண்டைக் கப்பல் திட்டம், அமெரிக்க கடற்படையின் எதிா்காலத்தை மாற்றியமைக்கலாம். இருந்தாலும் தொழில்நுட்ப சவால்கள், செலவு ஆகியவை இதில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.